/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆடிப்பெருக்கையொட்டி.... பங்காரி, சிங்காரி சகோதரிகள் சிலைகளுக்கு சிறப்பு பூஜை
/
ஆடிப்பெருக்கையொட்டி.... பங்காரி, சிங்காரி சகோதரிகள் சிலைகளுக்கு சிறப்பு பூஜை
ஆடிப்பெருக்கையொட்டி.... பங்காரி, சிங்காரி சகோதரிகள் சிலைகளுக்கு சிறப்பு பூஜை
ஆடிப்பெருக்கையொட்டி.... பங்காரி, சிங்காரி சகோதரிகள் சிலைகளுக்கு சிறப்பு பூஜை
ADDED : ஆக 03, 2024 11:40 PM

பாகூர்: ஆடிப்பெருக்கையொட்டி, பாகூர் ஏரியில் உள்ள பங்காரி, சிங்காரி சகோதரிகளின் சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்து கிராம மக்கள் வழிபட்டனர்.
புதுச்சேரியின் இரண்டாவது பெரிய ஏரியான பாகூர் ஏரி ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இந்த ஏரி பருவ மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் நிரம்பும் என்ற நிலை இருந்தது.
இதனால், மன்னர் காலத்தில் வாழ்ந்த சமூக ஆர்வலர்களான சகோதரிகள் பங்காரி, சிங்காரி, பாகூர் ஏரிக்கு மழை இல்லாத போதும் தண்ணீர் கொண்டு வர முடிவு செய்தனர். தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள சொர்ணாவூரில் இருந்து, பங்காரியின் முயற்சியால், 14 கி.மீ., நீளத்திற்கு வாய்க்கால் வெட்டி, பாகூர் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்தார்.
அதேபோல், சிங்காரி துார்ந்து கிடந்த பாகூர் ஏரியை துார்வாரி ஆழப்படுத்தி, கரையை சீரமைத்து தண்ணீரை சேமித்து வைத்தார்.
பாகூருக்கு நிரந்த நீராதாரத்தை ஏற்படுத்தி கொடுத்த பங்காரி, சிங்காரி சகோதரிகளின் சிலை, பாகூர் ஏரியின் உபரி நீர் வெளியேறும் அரங்கனுார் களிங்கல் பகுதியில் உள்ளது.
இங்கு நேற்று நான்காம் ஆண்டு ஆடிப் பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. அதனையொட்டி, மேலதாளங்களுடன் பங்காரி, சிங்காரி சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை நடந்தது. விழாவில் அரங்கனுார், சேலியமேடு, பாகூர், நிர்ணயப்பட்டு கிராம மக்கள் கலந்து கொண்டனர். பூஜை ஏற்பாடுகளை அரங்கனுார் குருஜி ராதாகிருஷ்ணன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.