/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெரியார் நகரில் தேர் பவனிக்கு எதிர்ப்பு
/
பெரியார் நகரில் தேர் பவனிக்கு எதிர்ப்பு
ADDED : செப் 16, 2024 05:44 AM

புதுச்சேரி : நெல்லித்தோப்பு பெரியார் நகரில், அரசுக்கு சொந்தமான இடத்தில் கட்டியுள்ள, தற்காலிக சர்ச்சில் தேர்பவனி நடத்த எதிர்ப்பு தெரிவித்து நடந்த அமைதி ஊர்வலத்தில், இரு தரப்பும் மாறிமாறி கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லித்தோப்பு பெரியார் நகர், 2வது மெயின்ரோடு, 5வது குறுக்கு தெரு சந்திப்பில், ஜாபர்பாய் தோட்டம் அருகே அங்கன்வாடி மையம் இயங்கி வந்தது. பழுதடைந்து இடித்து அகற்றப்பட்ட அங்கன்வாடி இடத்தில், ெஷட் அமைத்து, கொடி மரத்துடன் தற்காலிக சர்ச் கட்டப்பட்டுள்ளது.
இந்து முன்னணி மாநில தலைவர் சணில் குமார் தலைமையில், அரசு இடத்தில் சர்ச் கட்டுவதை கண்டித்து கடந்த 13ம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, விநாயகர் சிலை வைத்து வழிபட முயன்றதால், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்நிலையில் தற்காலிக சர்ச் இடத்தில் இருந்து தேர்பவனி நடத்த ஏற்பாடு நடந்தது. இதற்கு அப்பகுதி மக்களின் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணியினருடன் அமைதி ஊர்வலம் நடத்த நேற்று மாலை 5:30 மணிக்கு, ஜபர்பாய் தோட்டம் அருகே திரண்டு கூட்டம் நடத்தினர். இரவு 7:00 மணிக்கு தேர் பவனி துவங்க உள்ள இடத்திற்கு அமைதி ஊர்வலமாக சென்றனர்.
தேர் முன்பு அமைதி ஊர்வலம் வந்தபோது, போலீசார் தடுத்ததால் இந்து முன்னணியினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விநாயகர் சிலையுடன் சாலையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். எதிர் தரப்பினர் மாதா கோஷங்களை எழுப்பினர். 1 மணி நேரமாக இருதரப்பும் மாறிமாறி கோஷம் எழுப்பிய கொண்டிருந்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இரவு 8:00 மணிக்கு கிழக்கு எஸ்.பி. லட்சுமி சவுஜன்யா சம்பவ இடத்திற்கு வந்ததும், தேர் மின் விளக்குகள் அணைக்கப்பட்டது. விநாயகர் சிலையுடன் கோஷம் எழுப்பிவர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகே அந்த இடம் அமைதியானது.