/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒரே இரவில் 15 செ.மீ., கொட்டி தீர்த்த கனமழை; வெள்ளக்காடாக மாறிய நகர பகுதிகள்
/
ஒரே இரவில் 15 செ.மீ., கொட்டி தீர்த்த கனமழை; வெள்ளக்காடாக மாறிய நகர பகுதிகள்
ஒரே இரவில் 15 செ.மீ., கொட்டி தீர்த்த கனமழை; வெள்ளக்காடாக மாறிய நகர பகுதிகள்
ஒரே இரவில் 15 செ.மீ., கொட்டி தீர்த்த கனமழை; வெள்ளக்காடாக மாறிய நகர பகுதிகள்
ADDED : ஆக 11, 2024 05:18 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று முன்தினம் இரவு கொட்டி தீர்த்த கன மழையால் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு கருமேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்ய துவங்கியது. மளமளவென கொட்டிய மழையால், நகர பகுதி முழுதும் வெள்ளக்காடாக மாறியது.
சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர் பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர், கழிவுநீர் புகுந்ததால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். சண்முகாபுரம் வெள்ளவாரி வாய்க்கால், ஜீவானந்தபுரம் ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கடைகளுக்குள் புகுந்த தண்ணீர்
காந்தி வீதியில் உள்ள பல துணி கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது. கடைகளுக்குள் வைத்திருந்த துணிகள் மழையில் நனைந்து வீணாகியதால், அதனை நேற்று காலை சாலையில் வைத்து காய வைத்தனர்.
வீடுகளை காலி செய்து மக்கள்
ரெயின்போ, கிருஷ்ணா நகரில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் பலரது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததால், பலர் தங்களின் வீட்டை பூட்டி கொண்டு அருகில் உள்ள நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். நேற்று காலை 10:00 மணி வரை பல இடங்களில் மழைநீர் வடியாமல் தேங்கி நின்றிருந்தது.
சண்முகாபுரம் வெள்ளவாரி வாய்க்காலில் நிறுத்தி வைக்கப்பட்டு ஆட்டோ, மோட்டார் சைக்கிள், தள்ளுவண்டி ஆகியவை வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு அன்னை சோனியா காந்தி நகர் பகுதியில் கரை ஒதுங்கியது.
ஜீவானந்தபுரம் ஓடையில் ஏற்பட்ட வெள்ளத்தில் நேற்று முன்தினம் 6 பைக் ஸ்கூட்டர்கள் அடித்து செல்லப்பட்டது. அதனை போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர். கொக்குபார்க் அருகே மண்ணில் புதைந்து கிடந்த ஒரு ஸ்கூட்டரை நேற்று மாலை மீட்டனர்.
15.2. செ.மீ., மழை
9ம் தேதி காலை 8.30 மணி முதல் 10 ம்தேதி காலை 8.30 மணி வரை 15.2 செ.மீ மழையளவும் பதிவாகி இருந்தது. பத்துகண்ணு பகுதியில் 9.4 செ.மி.,திருக்கனுாரில் 3.3 செ.மீ., பாகூரில் 1.5 செ.மீ., மழை பதிவாகி இருந்தது. பலத்த மழையின் காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திற்கும் நேற்று பள்ளி கல்வித் துறை விடுமுறை அளித்தது. சிறப்பு வகுப்புகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது.