வாய்க்கலில் குப்பைகள் அகற்றம் பாகூர் கொம்யூன் ஆணையர் அதிரடி
வாய்க்கலில் குப்பைகள் அகற்றம் பாகூர் கொம்யூன் ஆணையர் அதிரடி
ADDED : ஏப் 29, 2026 08:42 PM

பாகூர்: பிள்ளையார்குப்பத்தில் வாய்க்காலில் குவிந்து கிடந்த குப்பைகள், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.
புதுச்சேரி – கடலுார் பிள்ளையார்குப்பம் சந்திப்பில் சாலையோரம் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால், பொதுப்பணித்துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. அங்குள்ள கடைகளில் இருந்து வீசப்படும் குப்பைகள், வாய்க்காலில் அடைத்து கொண்டு, கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கி அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது.
இது குறித்து, அப்பகுதி மக்கள், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, ஆணையர் சதாசிவம் ஆய்வு மேற்கொண்டு, உடனடியாக வாய்க்காலில் கிடக்கும் குப்பைகளை அகற்ற உத்தரவிட்டார்.
இதையடுத்து, பஞ்சாயத்து ஊழியர்கள், துப்புறவு பணியாளர்கள், ஜெ.சி.பி., வாகனம் மூலமாக வாய்க்காலில் கிடந்த குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அங்குள்ள கடைக்காரர்களிடம் குப்பைகளை முறையாக அகற்றிட வேண்டும். பொது இடங்களில் வீசக்கூடாது என, எச்சரிக்கை விடுத்து, ஓரிரு கடைகளுக்கு அபாராதம் விதிக்கப்பட்டது.
