மாங்கனி திருவிழாவை முன்னிட்டு காரைக்காலில் பந்தல் அமைப்பு
மாங்கனி திருவிழாவை முன்னிட்டு காரைக்காலில் பந்தல் அமைப்பு
ADDED : ஜூன் 12, 2026 08:03 PM
காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவிலில் வரும் 29ம் தேதி மாங்கனி திருவிழாவை முன்னிட்டு பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
காரைக்கால் மாவட்டத்தில், 63 நாயன்மார்களின் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு தனிக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் அம்மையாரின் கணவனிடம் சிவபெருமாள் மாங்கனி கொடுத்து அனுப்பி, அதை அடியார் வேடத்தில் சிவபெருமான் வந்து சாப்பிடுவதும், இதனால் காரைக்கால் அம்மையாரை பிரிந்து அவரது கணவர் வெளியூர் செல்வதும். அம்மையார் இறைவனை காண கயிலாயத்திற்கு தலைகீழாக கைகளால் நடந்து செல்வதையும் சித்தரிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா நடக்கிறது.
அதன்படி, வரும் 27ம் தேதி மாப்பிள்ளை அழைப்பு, 28ம் தேதி காரைக்கால் அம்மையார் பரமதத்தர் செட்டியார் திருக்கல்யாணம், இரவு பிஷாடணமூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடு, 29ம் தேதி சிவபெருமான் அடியார் கோலத்தில் வீதி உலா, அப்போது பக்தர்கள் மாங்கனி விசும் வைபவம் நடக்கிறது.
அன்று மாலை அம்மையார் சிவபெருமானுக்கு மாங்கனியுடன் அமுதுபடையல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 30ம் தேதி காட்சி கொடுத்தல் திருவீதியுலா நடக்கிறது. மாங்கனித்திருவிழாவை முன்னிட்டு பாரதியார் சாலையில் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சுப்ரமணியன், கோவில் தனி அதிகாரி விநாயகமூர்த்தி ஆகியோர் செய்து வருகின்றனர்.
