/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொடர் மின்தடையால் மக்கள் பாதிப்பு
/
தொடர் மின்தடையால் மக்கள் பாதிப்பு
ADDED : ஏப் 13, 2024 04:33 AM
பாகூர்: பாகூர், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் தொடர் மின்தடையால், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
புதுச்சேரி - கடலுார் சாலை காட்டுகுப்பம் மற்றும் முள்ளோடையில் துணை மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கிருந்து, பாகூர், சேலியமேடு, காட்டுக்குப்பம், கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம், தவளக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த துணை மின் நிலையங்களில் டிரான்ஸ்பார்மர்கள் புதுப்பிக்கப்படாமல் உள்ளதால், அடிக்கடி பழுதடைந்து மின் தடை ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு பாகூர் பகுதியில் உள்ள கிராமங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டது. தகவல் அறிந்த மின்துறையினர் மின் பழுதை கண்டறிந்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, நேற்று அவசர பராமரிப்பு பணிக்காக மாலை 3:00 மணி முதல் 5:30 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதேபோல், முள்ளோடை துணை மின் நிலையத்திலிருந்து காட்டுக்குப்பம் செல்லும் மின் பாதையில் பழுது ஏற்பட்டதால் மாலை 8:00 மணியளவில் மின்தடை ஏற்பட்டது. மின்துறை பொறியாளர் குழுவினர் மற்றும் ஊழியர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
தற்போது, கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், அடிக்கடி ஏற்படும் மின் தடையால், கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில், அரசு கவனத்தில் கொண்டு சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

