/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மக்களே உஷார்.... ஆன்லைன் கடன் செயலியில் ஒளிந்திருக்கும் ஆபத்து ; பாகிஸ்தானில் இருந்து வலைவிரிக்கும் மோசடி கும்பல்
/
மக்களே உஷார்.... ஆன்லைன் கடன் செயலியில் ஒளிந்திருக்கும் ஆபத்து ; பாகிஸ்தானில் இருந்து வலைவிரிக்கும் மோசடி கும்பல்
மக்களே உஷார்.... ஆன்லைன் கடன் செயலியில் ஒளிந்திருக்கும் ஆபத்து ; பாகிஸ்தானில் இருந்து வலைவிரிக்கும் மோசடி கும்பல்
மக்களே உஷார்.... ஆன்லைன் கடன் செயலியில் ஒளிந்திருக்கும் ஆபத்து ; பாகிஸ்தானில் இருந்து வலைவிரிக்கும் மோசடி கும்பல்
ADDED : மார் 09, 2025 04:02 AM
அவசர தேவைக்கு உடனடியாக பணம் கிடைக்கிறது என, பலரும் ஆன்லைன் செயலியில் பணம் வாங்குகின்றனர். அந்த செயலிகளுக்குள் ஒளிந்து இருக்கும் ஆபத்து யார் கண்ணுக்கும் தெரிவதில்லை.
இதனால் விட்டில் பூச்சிகள் போல் கடன் செயலியில் தானாகவே விழுந்து மாட்டிக்கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழுது வருகின்றனர். ஆன்லைன் செயலிகளால் புதுச்சேரியில் பல குடும்பங்கள் பாதிப்பது அதிகரித்துள்ளது.
அண்மையில் புதுச்சேரியை சேர்ந்த ஒருவர் ஆன்லைன் செயலில் அவசரத்திற்கு 7 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கினார்.
அதன் பிறகு வாங்கிய கடனையும் முறையாக கட்டினார். ஆனால் அதன் பிறகு தான் கடன் செயலியின் உண்மையான முகம் வெளிப்பட்டது.
இன்னும் நீ வாங்கிய கடனை முழுவதுமாக கட்டவில்லை. ஒழுங்காக கட்டிவிடு; இல்லையென்றால் நீயும், உன் குடும்பத்தினரும் நிர்வாணமாக இருப்பதை போன்று மார்பிங் செய்து, அந்த வீடியோக்களை உன்னுடைய நண்பர்களுக்கு அனுப்பிவிடுவோம் என, மிரட்டியுள்ளனர்.
அத்துடன் அவர்கள் கூறியதை போன்று சில மார்பிங் செய்யப்பட்ட நிர்வாண வீடியோக்களை அனுப்பி நக்கலாக சிரித்துள்ளனர்.
நொறுங்கி போன அவர், அவர்கள் கேட்கும்போதெல்லாம் கடனுக்காக பணத்தை கொடுத்து வந்துள்ளார். அப்படியும் அந்த கும்பல் அடங்கவில்லை. இப்போது சுதாரித்து கொண்ட அவர் சைபர் கிரைம் உதவியை நாடியுள்ளார்.
கடைசியாக அவர் வாங்கிய 7 ஆயிரம் ரூபாய் கடனுக்கு அவர் கட்டியது எவ்வளவு தெரியுமா.... 1.10 லட்சம் ரூபாய்.
இப்படி தான் புதுச்சேரியில் இளைஞர்கள், இளம்பெண்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள், அரசு ஊழியர்கள் என பலரும் கடன் செயலிகளால் நிம்மதியை இழந்து கண்ணீருடன் சைபர் கிரைம் போலீசில் புகாருடன் வரிசையில் நிற்கின்றனர்.
இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:
எந்தச் சிரமமுமின்றி சில நிமிடங்களில் கடன் தர உறுதியளிக்கும் செயலிகளை நீங்கள் டவுன்லோது செய்தவுடன் உங்கள் மொபைலில் உள்ள தொடர்புகள், புகைப்படங்கள் மற்றும் அடையாள ஆவணங்களை எடுத்துக்கொண்டு, பின் அந்தத் தகவல்களைப் பயன்படுத்தி உங்களை மிரட்டி பணம் பறிக்கின்றனர்.
வாடிக்கையாளர்கள் சரியான நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால் , சில சமயங்களில் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தினாலும் - இந்தச் செயலிகள் மார்பிங் செய்யப்பட்ட நிர்வாண படங்கள், வீடியோக்களை அனுப்பி மிரட்டி பணம் பறிக்கின்றனர்.
மகளை காப்பாற்ற தந்தையும், தாயை காப்பாற்ற மகனும் என பலரும் அவர்கள் கேட்கும் பணத்தை தந்துவிட்டு நிம்மதி இழந்து தவிப்பது கவலையளிக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தின் முன் தங்களின் நற்பெயரை தற்காத்துக்கொள்ள வேண்டும்.
வெறும் 20,000 ரூபாய் கடனுக்கு அந்த நற்பெயரை யாரும் கெடுத்துக் கொள்ள தேவையில்லை என்று முடிவு செய்து, அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்து நிம்மதி இழந்து தவிக்கின்றனர். புதுச்சேரி மக்களை உடனடி கடன் செயலி வலையில் வீழ்த்தி, அவர்களை மிரட்டியும் அவமானப்படுத்தியும் பணம் பறிக்கும் மோசடி சம்பவங்கள் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
இதுவரை 400 பேர் பணத்தையும், நிம்மதியையும் இழந்துள்ளனர். இதற்கு பின்னணியில் உள்ள கும்பலை ஆராய்ந்தால் அதிர்ச்சியளிக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் எண்களை மொபைல்கள் காட்டுகின்றன.
இரண்டு நாடுகளுக்கு இடையே சுமூக உறவு இல்லாத சூழ்நிலையில், அந்த நாட்டிற்கு சென்று, அந்த கும்பலை பிடித்து வருவது என்பது சாதாரண விஷயமல்ல.
இந்த விஷயத்தில் புதுச்சேரி மக்கள் தான் உஷாராக இருக்க வேண்டும்.
எனவே, உடனடி ஆன்லைன் செயலியில் கடன் வேண்டுமா என்பதை மக்கள் தான் யோசிக்க வேண்டும் என எச்சரிக்கை மணி அடிக்கின்றனர். புதுச்சேரி மக்களே... ஆன்லைன் செயலி விஷயத்தில் விழித்து கொள்வது நல்லது....