/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டுப்போட முடியாமல் நரிக்குறவர்கள் ஏமாற்றம்
/
ஓட்டுப்போட முடியாமல் நரிக்குறவர்கள் ஏமாற்றம்
ADDED : ஏப் 20, 2024 05:12 AM

புதுச்சேரி : வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டதால், ஓட்டளிக்க முடியாமல் நரிக்குறவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கருவடிக்குப்பம் ஏர்போர்ட் பின்புறம் ஏராளமான நரிக்குறவர்கள் வசிக்கின்றனர். நரிக்குறவர்கள் கட்டாயம் ஓட்டு அளிக்க வேண்டும் என தேர்தல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தேர்தல் அதிகாரி நேரில் சென்று, நரிக்குறவர் இன மக்களை சந்தித்து ஓட்டு அளிக்க வர வேண்டும் என கேட்டு கொண்டார். புதுச்சேரி லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது.
நரிக்குறவர் இன மக்களுக்கு லாஸ்பேட்டை மாருதி பள்ளியில் ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. நரிக்குறவர் இன மக்களில் சிலருக்கு பூத் சிலிப் வழங்கப்படவில்லை.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஓட்டுச்சாவடிக்கு வந்த 10க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் ஓட்டு அளிக்க வேண்டும் என, தெரிவித்தனர். வாக்காளர் பட்டியலை சரி பார்த்தபோது, நரிக்குறவர்கள் பலரது பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தது. இதை அறிந்த நரிக்குறவர்கள் ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். ஓட்டுப்போட அனுமதி மறுக்கப்பட்டால், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
நரிக்குறவர்கள் கூறுகையில், 'எங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் ஓட்டு அளித்துள்ளோம். தற்போது ஓட்டுபோட வந்தபோது, பெயர் இல்லை என கூறி அனுப்பிவிட்டனர். நாங்கள் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் தான். ஓட்டுபோட எங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் அரசு எங்களை புறக்கணிக்கின்றனர்.
வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் ஓட்டுரிமை பறிக்கப்படுகிறது. நாங்கள் வெளியூர்களுக்கு சென்று வேலை செய்வோம். அப்போது, வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய வந்த அதிகாரிகள் நாங்கள் வீட்டில் இல்லை என நினைத்து பட்டியலில் இருந்து எங்களை நீக்கி உள்ளனர். அதற்காக வேலைக்கு வெளியூர் செல்லாமல் இருக்க முடியுமா என, கேள்வி எழுப்பினர்.
ஆய்வுக்கு அதிகாரிகள் செல்லும்போது, குடியிருப்புகளில் சில நரிக்குறவர்கள் இல்லை என, அப்பகுதியினர் கூறியதால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

