/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிள்ளையார்குப்பம் -- செல்லிப்பட்டு படுகை அணை சீர் செய்வது எப்போது
/
பிள்ளையார்குப்பம் -- செல்லிப்பட்டு படுகை அணை சீர் செய்வது எப்போது
பிள்ளையார்குப்பம் -- செல்லிப்பட்டு படுகை அணை சீர் செய்வது எப்போது
பிள்ளையார்குப்பம் -- செல்லிப்பட்டு படுகை அணை சீர் செய்வது எப்போது
ADDED : மே 27, 2024 05:30 AM

புதுச்சேரி: பிள்ளையார்குப்பம் - செல்லிப்பட்டு படுகை அணை இடிந்து விழுந்து 3 ஆண்டுகள் கடந்தும் புதிய அணை கட்டாததால், வரும் பருவ மழை காலதித்தில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் வசிக்கும் மக்களுக்கான குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்கு நிலத்தடி நீரே ஆதாரமாக உள்ளது. ஆழ்துளை கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் எடுத்து மக்களின் அன்றாட பணிகளும், விவசாயமும் நடக்கிறது. புதுச்சேரிக்கு என ஆறு, அணைகள் ஏதும் கிடையாது.
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் இருந்து வரும் சங்கராபரணி ஆற்றில் படுகை அணைகள் கட்டி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி அதன் மூலம் நீர் பெறப்படுகிறது. இதுதவிர, புதுச்சேரி முழுதும் உள்ள ஏரி, குளங்களில் தண்ணீர் தேக்கி வைப்பதன் மூலமும் நிலத்தடி நீர் அளவு பாதுகாக்கப்பட்டு தண்ணீர் கிடைக்கிறது.
சங்கராபரணி ஆற்றில் செல்லிப்பட்டு பிள்ளையார்குப்பம் குறுக்கே பிரஞ்சுக்காரர்கள் காலத்தில் கடந்த 1906ம் ஆண்டு படுகை அணை கட்டப்பட்டது. மிகவும் பழமை யான இந்த படுகை அணை மூலம் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம் 40 கிராமங்களில் உள்ள 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது.
அணையை உரிய நேரத்தில் பராமரிக்காததால் கடந்த 2011ம் ஆண்டு பெய்த கன மழையால் படுகை அணையின் நடுபகுதி மற்றும் கீழ்தளம் சேதமடைந்து, அணை உடையும் அபாயம் ஏற்பட்டது. ஆனால் கற்களை கொட்டி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.
அணையை முழுமையாக சீரமைக்காததால் கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் பெய்த கன மழை மற்றும் விடூர் அணை திறப்பால் சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் அணையின் பெரும்பகுதி முற்றிலும் உடைந்து போனது. இதனால் தண்ணீர் வெளியேறி கடலில் கலந்து வீணானது.
நபார்டு வங்கி உதவியுடன் ரூ. 20.40 கோடி செலவில் புதிய தடுப்பணை கட்டப்படும் என கடந்த 2021ம் ஆண்டு அரசு அறிவித்தது. 3 ஆண்டுகள் கடந்தும் தடுப்பணையில் ஒரு கல் கூட வைக்கவில்லை. அணையில் தண்ணீர் இல்லாததால், விவசாயிகள் ஆழ்துளை கிணற்றின் ஆழத்தை அதிகரித்து தண்ணீரை உறிஞ்சி எடுக்கின்றனர். இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீருக்கு பாதிப்பு ஏற்படும்.
மேலும், நிலத்தடி நீர் மட்டம் குறைய ஆரம்பித்தால், கடல் நீர் உட்புகும் நிலை ஏற்படும். ஆண்டு முழுதும் நீரால் சூழ்ந்து, மழைக்காலத்தில் சுற்றுலா தளம்போல் காட்சி அளித்த அணை தற்போது வறண்டு சுடுகாடு போல காட்சி அளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறுகையில்; படுகை அணையை சீர்செய்ய கடந்த 2019ம் ஆண்டு திட்டமிடப்பட் டது. பணம் இல்லாததால் ரத்து செய்யப்பட்டது.
கடந்த 2021ம் ஆண்டு ரூ.19 கோடியில் தயாரிக் கப்பட்ட திட்டத்தை தலைமை செயலர் ரத்து செய்துவிட்டார். தற்போது ரூ.20 கோடி மதிப்பில் புதிய திட்டம் தயாரித்து டெண்டர் விடப்பட்டுள்ளது. வரும் ஜூன் இறுதிக்குள் படுகை அணை கட்டும் பணி துவங்க ஆர்டர் கொடுக் கப்படும் என கூறினார்.

