இடஒதுக்கீட்டை உறுதி செய்ய ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை
இடஒதுக்கீட்டை உறுதி செய்ய ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை
ADDED : ஜூன் 08, 2026 05:51 PM
திண்டிவனம்: ‘வன்னியர் சமூகத்திற்கு உரிய இடஒதுக்கீட்டை உறுதி செய்ய ஜாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு உடனே நடத்த வேண்டும்’ என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இடம்பெற்றுள்ள வன்னியர் சமூகத்தின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நிலை குறித்து அரசு துல்லியமான தரவுகளை சேகரித்து, அதற்கேற்ப உரிய இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.
தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவிற்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த 20 சதவீத பலனை பல்வேறு சமூகங்கள் பகிர்ந்து கொள்கின்றன.
மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்ட வன்னியர் சமூகத்திற்கு தனி உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சமூக நீதியை நிலைநாட்ட தமிழக அரசு உடனடியாக மாநில அளவில் முழுமையான ஜாதிவாரி, சமூக பொருளாதார கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அதன் மூலம், ஒவ்வொரு சமூகத்தின் மக்கள் தொகை, கல்வி நிலை, வேலை வாய்ப்பு நிலை, நிலஉடைமை, வருமானம் மற்றும் அரசு பணிகளில் உள்ள பிரதிநிதித்துவம் உள்ளிட்ட அனைத்து புள்ளி விபரங்களையும் வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும்.
அந்த தரவுகளின் அடிப்படையில், வன்னியர் சமூகத்திற்கு உரிய உள்ஒதுக்கீடு எவ்வளவு தேவை என்பதை அறிவியல் ரீதியாக தீர்மானிக்க வேண்டும். இடைக்கால ஏற்பாடாக, முன்னர் வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை மீண்டும் சட்டரீதியாக வழங்குவதற்கான வழிமுறைகளை அரசு ஆராய வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
