மும்மொழி கொள்கையை கைவிட வேண்டும் மத்திய அரசுக்கு பா.ம.க., ராமதாஸ் வலியுறுத்தல்
மும்மொழி கொள்கையை கைவிட வேண்டும் மத்திய அரசுக்கு பா.ம.க., ராமதாஸ் வலியுறுத்தல்
ADDED : மே 20, 2026 07:43 PM
திண்டிவனம்: புதிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும் என, மத்திய அரசுக்கு, பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவரது அறிக்கை:
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் நாட்டின் மொழி மற்றும் கல்வி அமைப்பில் ஒரே மாதிரியான கட்டுப்பாட்டை திணிக்க முயற்சிகள் நடக்கிறது. குறிப்பாக, மூன்று மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தி திணிப்பு மேற்கொள்ளப்படுவது தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது.
தமிழகம் என்பது மொழி, பண்பு, கலாசாரம் ஆகியவற்றை உயிராக காக்கும் மண். தமிழ் மொழிக்காக எண்ணற்ற போராட்டங்கள், தியாகங்களை செய்த வரலாறு கொண்ட மாநிலத்தில் எந்த வடிவிலும் மொழி திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும், தாய்மொழி பாதுகாப்பிற்கும், உலகளாவிய போட்டித் திறனுக்கும் ஏற்ற சிறந்த கல்வி முறையாகும். தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இரு மொழிகளே தமிழக மாணவர்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்கின்றன.
கல்வி என்பது மாநிலங்களின் உரிமை. மாநிலங்களின் மொழி, பண்பு, சமூக சூழல் ஆகியவற்றை புறக்கணித்து ஒரே மாதிரியான கல்விக் கொள்கையை திணிப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகும்.
தமிழகத்தின் இருமொழிக் கொள்கையை காரணம் காட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி தொடர்பான நிதிகளை வழங்காமல் மத்திய அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது. மாநில உரிமைகளை மதிக்காமல், மொழிக் கொள்கையை அழுத்தமாக பயன்படுத்தி நிதியை மறுப்பது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல.
தமிழ் மொழியின் உரிமை மற்றும் வளர்ச்சியை பாதுகாப்பது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும். எனவே, மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையின் பெயரில் இந்தித் திணிப்பு முயற்சிகளை உடனடியாக கைவிட்டு, தமிழகத்தின் இருமொழிக் கொள்கையை மதித்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
