ADDED : ஜூலை 02, 2026 08:10 PM
புதுச்சேரி: திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மகன் புஷ்பராஜ், 22; பெயிண்டர். கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்னை காரணமாக யாரிடம் சரியாக பேசாமல் புஷ்பராஜ் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் வீட்டில் சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு துாங்க சென்றவர், நேற்று காலை வரையில் வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த கோபாலகிருஷ்ணன், வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது, புஷ்பராஜ் அறையின் மின் விசிறியில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
தகவலறிந்த திருக்கனுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று புஷ்பராஜ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோபாலகிருஷ்ணன் புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
