/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீஸ் அதிகாரிகள் விரைவில் இடமாற்றம்?
/
போலீஸ் அதிகாரிகள் விரைவில் இடமாற்றம்?
ADDED : மே 26, 2024 05:09 AM
கஞ்சா விற்பனையை தடுக்காததால் கவர்னர் அதிரடி
புதுச்சேரியில் கொடிக்கட்டி பறக்கும் கஞ்சா விற்பனையை முழுதுமாக ஒழிக்குமாறு, கவர்னர் ராதாகிருஷ்ணன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, ரவுடிகளின் வீடுகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
ரயில் நிலையம், கூரியர் பார்சல் அலுவலகங்களிலும் சோதனை நடத்தினர். ஆனால், 1 கிராம் கஞ்சா கூட சிக்கவில்லை. புதுச்சேரிக்குள் கஞ்சா கடத்தி வரப்படுவது தடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
ஆனால், மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் பலருக்கும் கஞ்சா தடையின்றி கிடைக்கிறது. கஞ்சா புகைக்கும் நபர்களுக்கும் வழக்கம்போல் கஞ்சா கிடைத்து கொண்டு உள்ளது. அதேசமயம், போலீசாரின் கெடுபிடியால் கஞ்சா விலை உயர்ந்து விட்டதாக தெரிவிக்கின்றனர்.
கஞ்சா கடத்தலை தடுக்கவும், விற்பனை செய்வோர் மீதும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என அதிருப்தி அடைந்த கவர்னர் ராதாகிருஷ்ணன், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளார். இதனால், தேர்தல் முடிவுகள் வெளியான பின், போலீஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக, போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.