/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அனுமதியின்றி ஆடல், பாடல் போலீசார் வழக்குப் பதிவு
/
அனுமதியின்றி ஆடல், பாடல் போலீசார் வழக்குப் பதிவு
ADDED : ஜூன் 09, 2024 03:51 AM
திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு திரவுபதி அம்மன் கோவில் தீமிதி உற்சவத்தில் போலீஸ் அனுமதி இன்றி ஆடலும், பாடலும் நிகழ்ச்சி நடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருக்கனுார் அடுத்த மண்ணாடிப்பட்டு கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி உற்சவம் கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இரண்டாம் நாள் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு ஆடலும், பாடலும் நிகழ்ச்சி கோவில் திடலில் நடந்தது.
ஆனால், ஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கு திருக்கனுார் போலீசாரிடம் முறையாக அனுமதி பெறவில்லை என தெரிகிறது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ராஜகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்று ஆடலும், பாடலும் நிகழ்ச்சியை பாதியில் தடுத்து நிறுத்தினர். இதற்கு, விழாக் குழுவினர் மற்றும் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் போலீஸ் அனுமதி இன்றி கோவில் திருவிழாவில் ஆடலும், பாடலும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த இரண்டாம் நாள் விழா குழுவினர், நிகழ்ச்சிக்கு ஒளியும், ஒலியும் அமைத்து கொடுத்த பாண்டியன், ஆடலும், பாடலும் இசைக் குழுவினரின் ஒருங்கிணைப்பாளர் பேட்ரிக் ஆகியோர் மீது திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.