ADDED : மே 04, 2024 07:08 AM
அரியாங்குப்பம் : குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டிய போது, மின்சார கேபிள் அறுந்ததால், அரியாங்குப்பம் பகுதியில் 6 மணி நேரம் மின்சாரம் தடைபட்டு, மக்கள் அவதிப்பட்டனர்.
அரியாங்குப்பத்தில் இருந்து முருங்கப்பாக்கம் செல்லும் சாலையில், பொதுப்பணித்துறை மூலம் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு முருங்கப்பாக்கம் கார் கம்பெனி அருகே ஜே.சி.பி., இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டினர்.
அப்போது, அருகில் மரப்பாலம் மின் நிலையத்தில் இருந்து அரியாங்குப்பத்திற்கு செல்லும் மின்சார கேபிள் அறுந்தது. இதனால், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தகவலறிந்த மின்துறை ஊழியர்கள் இரவு முழுதும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால், அரியாங்குப்பம், வீராம்பட்டினம், மணவெளி ஆகிய பகுதியில் நேற்று முன்தினம் இரவு 12:00 மணி முதல் காலை 6:00 மணி மின்சாரம் இல்லை. இதனால், பொது மக்கள் கடும் அவதிப்பட்டனர்.