/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவி பாலியல் விவகாரத்தில் மூடிய தனியார் பள்ளி திறப்பு
/
மாணவி பாலியல் விவகாரத்தில் மூடிய தனியார் பள்ளி திறப்பு
மாணவி பாலியல் விவகாரத்தில் மூடிய தனியார் பள்ளி திறப்பு
மாணவி பாலியல் விவகாரத்தில் மூடிய தனியார் பள்ளி திறப்பு
ADDED : மார் 01, 2025 04:22 AM

அரியாங்குப்பம் : புதுச்சேரியில், பள்ளி சிறுமிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், மூடப்பட்ட தனியார் பள்ளி, 14 நாட்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது.
தவளக்குப்பம் தானாம்பாளையம் செயின்ட் ஜோசப் ஆங்கில பள்ளியில், 1ம் வகுப்பு படித்த 6 வயது சிறுமிக்கு, ஆசிரியர் மணிகண்டன்,25; பாலியல் தொல்லை கொடுத்தார். இதையறிந்த பெற்றோர் மற்றும் பொது மக்கள், கடந்த 14ம் தேதி திரண்டு வந்து, பள்ளியிலிருந்த அந்த ஆசிரியரை தாக்கி, வாகனம் மற்றும் பொருட்களை சூறையாடினர்.
ஆத்திரமடைந்த மக்கள், அந்த ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி, தவளக்குப்பம் மெயின் ரோடில் மறியலில் ஈடுபட்டனர்.
குழந்தைகள் நல அமைப்பு கொடுத்த புகாரில், தவளக்குப்பம் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து, ஆசிரியர் மணிகண்டனை 15ம் தேதி கைது செய்து, சிறையில் அடைத்தனர். பள்ளி மூடப்பட்டது.
மூடப்பட்ட அந்த பள்ளியை திறக்க வலியுறுத்தியும், சி.பி.ஐ., விசாரணை நடத்த கோரியும், கடந்த 17ம் தேதி, பள்ளி முன்பு திரண்ட அப்பள்ளி மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில், பெற்றோர்கள், முக்கிய பிரமுகர்களை அழைத்து, ஆலோசனை நடத்தினர்.
இதற்கிடையே, அப்பள்ளியில் படித்த 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், அரியாங்குப்பம் தனியார் பள்ளியில், பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வை எழுதினர்.
பள்ளி சிறுமி பாலியல் வழக்கு, கோர்ட்டில், நடந்து வரும் நிலையில், புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் அந்த பள்ளியை திறக்க உத்தரவிட்டது.
இதனால், கடந்த 15ம் தேதி மூடப்பட்ட பள்ளி, கல்வித்துறை அனுமதியின் பேரில், 14 நாட்களுக்கு பிறகு நேற்று காலை திறக்கப்பட்டது. 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.
தொடர்ந்து, 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்கி நடக்க உள்ளது. பள்ளி முன், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.