/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆசிரியர்கள் பற்றாக்குறையை கண்டித்து போராட்டம்
/
ஆசிரியர்கள் பற்றாக்குறையை கண்டித்து போராட்டம்
ADDED : ஜூலை 15, 2024 11:36 PM

கொத்தபுரிநத்தத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் சாலை மறியல்
திருபுவனை: கொத்தபுரிநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து மாணவர்கள், பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொத்தபுரிநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வந்தனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இப்பள்ளி கடந்த 2016-2017ம் கல்வியாண்டு தொடங்கி 2021-2022 ம் கல்வியாண்டுவரை தொடர்ந்து 6 ஆண்டுகள் 100 சதவீதம் தேர்ச்சிபெற்று சாதனை படைத்தது.
இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்ச்சி சதவீதம் குறைந்தது.
பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெற்றோர்கள் கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்து நடவடிக்கை இல்லை. இதனால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளிகளில் சேர்த்தனர். தற்போது மாணவர்களின் எண்ணிக்கை 350 ஆக குறைந்துள்ளது.
இந்த நிலையில் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று காலை 9.00 மணிக்கு பள்ளி் மாணவ-மாணவிகள் ஒட்டு மொத்தமாக வகுப்புகளை புறக்கணித்து பள்ளிக்கு எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். தகவல் அறிந்த புதுச்சேரி முதன்மைக் கல்வி அதிகாரி மோகன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், அவர் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல் அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.
இதையடுத்து பகல் 11.30 மணிக்கு மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.