மார்க்கெட் கமிட்டி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மார்க்கெட் கமிட்டி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 11, 2026 06:41 PM
புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதி கூனிச்சம்பட்டு மார்க்கெட் கமிட்டி நிர்வாகத்தை கண்டித்து இந்திய ஐக்கிய கம்யூ., காங்., த.வெ.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மார்க்கெட் கமிட்டி எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய ஐக்கிய கம்யூ., மாநில செயலாளர் அருள் தலைமை தாங்கினார். கூனிச்சம்பட்டு முன்னாள் தலைவர் ஞானசேகரன், தொகுதி செயலாளர் மன்னாதன் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் துணை சபாநாயகர் செல்வம், த.வெ.க., தொகுதி பொறுப்பாளர் பாரதிதாசன், காங்., மாநில பொதுச் செயலாளர்கள் சுரேஷ், முத்துரங்கம், ரகுபதி, மாநில துணை செயலாளர் பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், கூனிச்சம்பட்டு மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகள் விற்பனை செய்த பொருட்களுக்கான நிலுவைத் தொகை ரூ. 3.25 கோடியை உடனே பட்டுவாடா செய்ய வேண்டும். விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களை வைப்பதற்கு போதிய இடவசதியை ஏற்படுத்தி தர வேண்டும். இ.நாம் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
