/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூர் சாராயக்கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
/
பாகூர் சாராயக்கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
ADDED : ஜூலை 27, 2024 05:02 AM

பாகூர்: பாகூரில் அரசுக்கு சொந்தமான இடத்தில், சாராயக்கடை அமைத்திட எதிர்ப்பு இருந்து வரும் நிலையில், புதியதொரு இடத்தில் சாராயக்கடை அமைக்கும் பணியையும், பொது மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாகூர் ஏரிக்கரை வீதியில் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்திற்கு சொந்தமான இடத்தில் சாராயக்கடை இயங்கி வந்தது. இந்த கடையின் விற்பனை உரிம கால முடிவடைந்த நிலையில், மீண்டும் ஏலம் எடுத்த நபர், அந்த இடத்தில் சாராயக் கடையை திறக்க சென்றுள்ளார். அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அங்கு சாராயக்கடைக்கு பதிலாக அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், பாகூர் ஏரியின் கரை பகுதியில் தற்காலிகமாக இயங்கி வரும் சாராயக்கடையை, அங்குள்ள ஒரு தனிநபருக்கு சொந்தமான இடத்தில் மாற்றி அமைக்க நேற்று முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதையறிந்த, அப்பகுதி மக்கள், இந்திய கம்யூ., கட்சியினரும், அங்கு சாராயக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்த பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜித், சப் இன்ஸ்பெக்டர் நந்தக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உங்களது கோரிக்கையை எதுவாக இருந்தாலும், அதை எழுத்து பூர்வமாக கலால் துறைக்கு தெரியப்படுத்துங்கள் என கூறி அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.