ADDED : மே 10, 2026 07:41 PM
புதுச்சேரி: போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து, கன்னியக்கோவில் நபர் ரூ.2.33 லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளார்.
புதுச்சேரி, கன்னியகோவிலை சேர்ந்தவரை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், ஆன்லைனில் டிரேடிங் செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார். இதைநம்பிய, அவர் மர்மநபர் தெரிவித்த ஆன்லைன் டிரேடிங்கில் பல்வேறு தவணைகளாக ரூ. 2 லட்சத்து 33 ஆயிரத்து 372 முதலீடு செய்துள்ளார்.
பின், அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்து, அதன்மூலம் வந்த லாபத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை. அதன் பிறகே மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
இதேபோல், லாஸ்பேட்டையை சேர்ந்தவர் ரூ. 83 ஆயிரத்து 998, பாகூரை சேர்ந்தவர் ரூ.11 ஆயிரம் என மொத்தம் 3 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ. 3 லட்சத்து 28 ஆயிரத்து 370 இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
