தேசிய அளவிலான திறன் போட்டி புதுச்சேரி வீரர்கள் சாதனை
தேசிய அளவிலான திறன் போட்டி புதுச்சேரி வீரர்கள் சாதனை
ADDED : மே 12, 2026 11:23 PM
புதுச்சேரி: தேசிய அளவிலான திறன் போட்டியில், புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள், தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.
தேசிய திறன் மேம்பாட்டு ஆணையம் சார்பில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, திறமை மிக்க இளைஞர்களை கண்டறியும் வகையில், இந்தியா ஸ்கில்ஸ் திறன் போட்டிகளை நடத்தி வருகிறது. இதையொட்டி, முதற்கட்டமாக, ஹைதராபாத்தில் கடந்த பிப்வரி மாதம் நடந்த தென்னிந்திய அளவிலான போட்டியில், புதுச்சேரியில் இருந்து 11 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இதில், ரேஷ்மா (எ) ஸ்ரீநிதி, டிஜிட்டல் இண்டராக்டிவ் மீடியா பிரிவில் தங்கப் பதக்கம், ஷரண் யஷ்வந்த், சாப்ட்வேர் அப்ளிகேஷன் டெவலப்மெண்ட் பிரிவில் வெள்ளிப் பதக்கம், விசாகன், 3டி டிஜிட்டல் கேம் ஆர்ட் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
அன்புமணி, வில்சன் ஆகியோர் எலக்ட்ரிகல் இன்ஸ்டலேஷன் மற்றும் வெப் டெக்னாலஜீஸ் பிரிவுகளில் நான்காம் இடத்தை பிடித்து மெடலியன் வென்றனர். முதல் இரண்டு இடங்களை பிடித்த ரேஷ்மா, ஷரண் யஷ்வந்த் இருவரும், டில்லியில் நடந்த தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர். இதில், ரேஷ்மா, டிஜிட்டல் இண்டராக்டிவ் மீடியா பிரிவில் தங்கப் பதக்கத்துடன் ஒரு லட்ச ரூபாயும், ஷரண் யஷ்வந்த், சாப்ட்வேர் அப்ளிகேஷன் பிரிவில் வெண்கலப் பதக்கத்துடன் 50 ஆயிரம் ரூபாய் வென்றனர்.
மத்திய திறன் மேம்பாடு மற்றும் பணியமர்வு அமைச்சக இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதன்மூலம், ரேஷ்மா, ஷரண் யஷ்வந்த் இருவரும், சீனாவில் உள்ள ஷங்ஹாய் நகரத்தில் நடைபெறும் சர்வதேச அளவிலான உலகத் திறன் போட்டிக்கான தகுதிச் சுற்றில் நுழைந்துள்ளனர்.
தகுதிச் சுற்றில் வெல்லும் பட்சத்தில், இவர்கள் சர்வதேச உலகத் திறன் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பார்கள். இத்தகவலை, புதுச்சேரி தொழிலாளர் துறை செயலர் ஸ்மிதா தெரிவித்துள்ளார்.
