புதுச்சேரி மாணவர்களின் ‘நீட்’ தேர்வு முடிவுகளை வெளியிட கோரிக்கை
புதுச்சேரி மாணவர்களின் ‘நீட்’ தேர்வு முடிவுகளை வெளியிட கோரிக்கை
ADDED : மே 12, 2026 06:44 PM
புதுச்சேரி: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என, புதுச்சேரி மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர் நலச்சங்க தலைவர் பாலசுப்ரமணியன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் கூறியிறுப்பதாவது:
கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் 26 லட்சம் மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வை எழுதினர். இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
நீட் நுழைவுத் தேர்வில் ராஜஸ்தான் மற்றும் சில மாநிலங்களில் கேள்வித்தாள்கள் கசிவானது சம்மந்தமாக, கடந்த மே மாதம் 8ம் தேதி அன்று தேசிய தேர்வு முகமை, டில்லியில் உள்ள புலனாய்வுத்துறை இயக்குநரிடம் புகார் அளித்திருந்தது.
இதையடுத்து, 3ம் தேதி நீட் நுழைவுத்தேர்வு முற்றிலும் ரத்து செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாணவர்கள் மிகவும் கடுமையாக பயின்று நீட் நுழைவுத் தேர்வினை எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் நிலையில், தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே தவறு நடந்த மாநிலங்களை தவிர்த்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
