/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீண்டும் சூடுபிடிக்கும் புதுச்சேரி அரசியல் களம் பா.ஜ., - காங்., கட்சிகளில் திக்... திக்...
/
மீண்டும் சூடுபிடிக்கும் புதுச்சேரி அரசியல் களம் பா.ஜ., - காங்., கட்சிகளில் திக்... திக்...
மீண்டும் சூடுபிடிக்கும் புதுச்சேரி அரசியல் களம் பா.ஜ., - காங்., கட்சிகளில் திக்... திக்...
மீண்டும் சூடுபிடிக்கும் புதுச்சேரி அரசியல் களம் பா.ஜ., - காங்., கட்சிகளில் திக்... திக்...
ADDED : மே 26, 2024 05:10 AM
புதுச்சேரி லோக்சபா தேர்தல் முடிவுகள், உள்ளூர் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
புதுச்சேரி லோக்சபா தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக, உள்துறை அமைச்சராக பதவி வகிக்கும் நமச்சிவாயம் களம் இறக்கப்பட்டார். அவர், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யாமல் தேர்தலில் போட்டியிட்டார்.
எதிர்தரப்பில், காங்., வேட்பாளராக தற்போதைய எம்.பி.,யும், மாநில காங்., தலைவருமான வைத்திலிங்கம் களம் இறங்கினார்.
வரும் 4ம் தேதியன்று, ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. புதுச்சேரியை பொறுத்தவரை, தேர்தல் முடிவுகள் எப்படி வந்தாலும், மாநில அரசிலும், உள்ளூர் அரசியலிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
நமச்சிவாயம் வெற்றி பெற்றால், அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க பா.ஜ., தலைமை திட்டமிட்டுள்ளது. மத்திய அமைச்சராக பொறுப்பேற்கும் பட்சத்தில், புதுச்சேரி கூட்டணி அரசில் அவர் வகித்து வந்த உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார்.
காலியாகும் அமைச்சர் பதவி, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களில் ஒருவருக்கு வழங்கப்படும். உள்துறை அமைச்சர் பதவிக்கு தற்போதைய சபாநாயகர் பெயரும் தலைமையின் தீவிர பரிசீலனையில் உள்ளது. எப்படி இருந்தாலும், அமைச்சர், சபாநாயகர் போன்ற 'பவர்புல்' பதவிகளில் ஒன்று பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களில் ஒருவருக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
'லக்கி பிரைஸ்' அடிக்கப் போகும் எம்.எல்.ஏ., யார் என்பது, வரும் 4ம் தேதிக்கு பிறகே வெளிச்சமாகும்.
தேர்தல் முடிவில் மாற்றம் இருக்கும் பட்சத்தில், நமச்சிவாயம் மாநில அமைச்சராக தொடருவார். இதன் காரணமாக, பா.ஜ., வட்டாரத்தில் இப்போதே பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
காங்., முகாமில் நடப்பது என்ன?
காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெற்று, இண்டியா கூட்டணியும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும் பட்சத்தில், வைத்திலிங்கத்துக்கும் மத்திய அமைச்சராவதற்கான வாய்ப்புகள் உள்ளது. காங்., தலைமையின் 'குட் புக்'கில் உள்ள அவர், கட்சியின் சீனியர் தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார்.
புதுச்சேரியில் இரண்டு முறை முதல்வராகவும், அமைச்சராகவும், சபாநாயகராகவும் பதவி வகித்துள்ள அவருக்கு, நீண்ட காலமாகவும், தொடர்ச்சியாகவும் எம்.எல்.ஏ.,வாக இருந்த பெருமையும் உண்டு. எனவே, இண்டியா கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில், பழுத்த அனுபவம் உள்ள வைத்திலிங்கத்திற்கு நல்ல வாய்ப்பு காத்திருக்கிறது. இல்லாவிட்டால், எம்.பி.,யாக தொடருவார்.
அதேசமயம், தேர்தல் முடிவுகள் மாறும் பட்சத்தில், மாநில அரசியலில் கவனம் செலுத்துவதற்கு வைத்திலிங்கம் தரப்பினர் திட்டமிட்டுள்ளனர். மூன்றாவது முறையாக முதல்வராகும் கனவில் உள்ள அவர், ஏற்கனவே வெற்றி பெற்ற காமராஜர் நகர் தொகுதி மீது கண் வைத்துள்ளார். அந்த தொகுதியில் தற்போதும் வலம் வருவது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக, காங்., வட்டாரத்திலும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் உள்ளது. இதனால், புதுச்சேரி அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்க துவங்கி உள்ளது.