கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு ரூ.60,000 அபராதம்: ஆணையம்
கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு ரூ.60,000 அபராதம்: ஆணையம்
ADDED : மே 25, 2024 02:18 AM
புதுச்சேரி:புதுச்சேரி, குயவர்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். கடந்த, 2018ம் ஆண்டு மே மாதம் சென்னையில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரம் செல்ல 'கத்தார் ஏர்வேஸ்' நிறுவனத்தில் பிப்ரவரி மாதம் 16,803 ரூபாய் செலுத்தி, டிக்கெட் முன்பதிவு செய்தார்.
உடல் நிலைக் காரணமாக பயணத்தை ரத்து செய்த ஆறுமுகம், டிக்கெட்டை ரத்து செய்ய கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு இ - மெயில் அனுப்பினார். அதை ஏற்ற ஏர்வேஸ் நிறுவனம் அவரது டிக்கெட்டை ரத்து செய்து, 11,173 ரூபாயை, அனுப்புவதாக இ - மெயிலில் பதில் அளித்து இருந்தது.
ஆனால், அந்தப் பணம் ஆறுமுகத்துக்கு வந்து சேரவில்லை. ஏர்வேஸ் நிறுவனத்தின் சேவை குறைபாட்டால், தனக்கு ஏற்பட்ட பண நஷ்டம் மற்றும் மன உளைச்சலுக்கு இழப்பீடு கோரி புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில், வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கு விசாரணைக்கு, கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் ஆஜராகவில்லை.
வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் முத்துவேல், உறுப்பினர்கள் கவிதா மற்றும் ஆறுமுகம் ஆகியோர், கத்தார் ஏர்வேஸ் நிறுவனம், ஆறுமுகத்தின் ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்டின், மீதித் தொகை 11,173 ரூபாயை, ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் செலுத்தவும், சேவை குறைபாட்டுக்காக 50,000 ரூபாய் அபராதம் மற்றும் வழக்கு செலவுக்காக 10,000 ரூபாயை 45 நாட்களில் வழங்க உத்தரவிட்டனர்.
