மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஓ.பி.சி., சீர்மரபினருக்கு தனி பட்டியல் மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஓ.பி.சி., சீர்மரபினருக்கு தனி பட்டியல் மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
ADDED : மே 14, 2026 07:00 PM
திண்டிவனம்: ‘மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஓ.பி.சி., மற்றும் சீர்மரபினரை தனித்து பட்டியலிட வேண்டும்’ என மத்திய அரசுக்கு பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
மத்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிவிப்புகளில், வீடுகள் பட்டியலிடும் பணியின் போது கேட்கப்படும் ஜாதி குறித்த வினாவில் பட்டியல் ஜாதிகள் / பட்டியல் பழங்குடியினர் மற்றும் மற்றவர்கள் என மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட ஓ.பி.சி.,மற்றும் சீர்மரபினர் மக்கள் மற்றவர்கள் என்ற பொதுவான பிரிவில் அடைக்கப்பட்டு, முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டிருப்பது சமூக நீதிக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகமாகும்.
எஸ்.சி., மற்றும் பழங்குடியின பிரிவினரை மட்டும் தனிப் பிரிவாகக் கொண்டு கணக்கெடுத்து விட்டு, அதே நிலையில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் பிரிவினரைத் தவிர்ப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15 மற்றும் 16வது பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் தன்னிச்சையான செயலாகும்.
தமிழகத்தில் வரும் ஜூலை 17ம் தேதி ஜூலை 31 வரை நடைபெறவுள்ள வீடுகள் பட்டியலிடும் பணியிலும், 2027ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பிலும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் பிரிவினரைத் தனி பிரிவாகச் சேர்த்து கணக்கெடுக்க வேண்டும்.
100 கோடி மக்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினரை புறக்கணிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மத்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, ஓ.பி.சி., மக்களின் நீண்ட காலக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
