/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.டெக்., எம்.டெக்., பி.எட்., படிப்புகளுக்கு புதிய கல்வி கட்டணம் வெளியீடு
/
பி.டெக்., எம்.டெக்., பி.எட்., படிப்புகளுக்கு புதிய கல்வி கட்டணம் வெளியீடு
பி.டெக்., எம்.டெக்., பி.எட்., படிப்புகளுக்கு புதிய கல்வி கட்டணம் வெளியீடு
பி.டெக்., எம்.டெக்., பி.எட்., படிப்புகளுக்கு புதிய கல்வி கட்டணம் வெளியீடு
ADDED : செப் 04, 2024 07:50 AM
புதுச்சேரி : பி.டெக்., எம்.டெக்., பி.எட்., சட்ட படிப்புகளுக்கு 3 ஆண்டுகளுக்கான புதிய கல்வி கட்டணம் வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் தனியார் சுயநிதி பொறியியல் கல்லுாரிகள், பி.எட்., சட்ட கல்லுாரிகளுக்கு 2024-25, 2025-26, 2026-27 ம் கல்வி ஆண்டிற்கான புதிய கல்வி கட்டணத்தை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கண்ணம்மாள் தலைமையிலான கட்டண குழு நிர்ணயித்துள்ளது. புதிய கல்வி கட்டணம் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி, மணக்குள விநாயகர் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி, ராஜிவ் காந்தி, வெங்கடேஸ்வரா, ராக், கிறிஸ்ட், கிறிஸ்ட் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய 7 கல்லுாரிகளில் பி.டெக். படிப்பு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 2024-25ம் ஆண்டு குறைந்தபட்சமாக 35,200, அதிகபட்சமாக 46,800 ரூபாய்; நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 36,800, - 48,900 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எம்.டெக்., படிப்பு அரசு ஒதுக்கீட்டு இடத்திற்கு குறைந்தபட்சம் 72,100, அதிகபட்சமாக 84,700, ஆகவும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 79,100, - 88,600 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்.பி.ஏ., பி.ஆர்க் படிப்புகளுக்கும் கல்வி கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
போப் ஜான்பால், வெங்கடேஸ்வரா, நேரு, வாசவி, கிருஷ்ணசாமி மகளிர் கல்லுாரி, மாகி ஸ்ரீநாராயணா ஆகிய 6 கல்லுாரிகளில், பி.எட்., படிப்பிற்கு 2024-25ம் ஆண்டிற்கு குறைந்த பட்சம் 30,000, அதிகபட்சமாக 50,600 ரூபாய் வரையும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 34,500 - 55,500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் பி.ஏ., எல்.எல்.பி., மற்றும் எல்.எல்.பி., படிப்புகளுக்கு 2024-25 கல்வி ஆண்டிற்கு இரு சட்ட படிப்புகளில் அரசு ஒதுக்கீடு இடத்திற்கு 25,000, நிர்வாக ஒதுக்கீட்டு இடத்திற்கு 50,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை சார்பு செயலர் சவுமியா பிறபித்துள்ளார்.
அவர், மேலும் கூறியிருப்பதாவது:
கட்டண திருத்த முன்மொழிவுகளை சமர்ப்பிக்காத அல்லது கட்டண உயர்வுக்கு எந்த பிரதிநிதித்துவமும் செய்யாத நிறுவனங்களுக்கு கட்டணம் திருத்தப்படவில்லை. முந்தைய கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தையே நிறுவனங்கள் வசூலிக்க வேண்டும். இருப்பினும், முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதன் மூலம் கட்டணம் மேம்படுத்துவதற்கு அவர்கள் அணுகலாம்.
தற்போது கட்டண குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை தவிர, எந்தவொரு போர்வையிலும் எந்தவொரு கட்டணத்தையும் வசூலிக்க கல்வி நிறுவனங்களுக்கு உரிமை இல்லை. எந்தவொரு விலகலும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறுவதாகும்.
மீறும் கல்வி நிறுவனத்தின் நிர்வாகத்தின் மீது உரிய அதிகாரிகளால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். மூன்று கல்வி ஆண்டுகளுக்கு கட்டணக்குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்துடன் கூடுதலாக கல்வி நிறுவனங்கள் திரும்ப பெறக்கூடிய ஒருமுறை வைப்புத்தொகையாக பொறியியல் கல்லுாரிகள் ஒரு மாணவருக்கு 10 ஆயிரத்துக்கு மிகாமலும், பி.எட் மற்றும் சட்டக்கல்லூரிகள் 5 ஆயிரத்துக்கு மிகாமலும் பெறலாம் என, தெரிவித்துள்ளார்.