/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விமான நிலைய சாலையில் விபத்து அபாயம் சரியான திட்டமிடல் இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சம்
/
விமான நிலைய சாலையில் விபத்து அபாயம் சரியான திட்டமிடல் இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சம்
விமான நிலைய சாலையில் விபத்து அபாயம் சரியான திட்டமிடல் இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சம்
விமான நிலைய சாலையில் விபத்து அபாயம் சரியான திட்டமிடல் இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : ஆக 23, 2024 06:39 AM

புதுச்சேரி: புதுச்சேரி விமான நிலையம் வாயில் எதிரே 3.5 கோடி ரூபாயில் லட்சுமி நகர் வெள்ளவாரி ஓடையில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை சரியான திட்டமிடல் இல்லாததால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட புதுச்சேரி விமான நிலையம் பிரதான ஒன்றாம் எண் நுழைவு வாயிலையொட்டி, லட்சுமி நகர் வெள்ளவாரி ஓடை செல்கிறது.
மழைக்காலங்களில் இந்த ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், அதிக மண் அரிப்பு ஏற்பட்டது. அடித்துச் செல்லப்பட்ட மண் இடையன்சாவடி மெயின்ரோடு முழுதும் சேர்ந்து, இ.சி.ஆரிலும் சகதியாக நின்றது.
அதையடுத்து, லட்சுமி நகர் வெள்ளவாரி ஓடையை சிமெண்ட் சாலையாக மாற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதை ஏற்று கடந்த பிப்ரவரி மாதம் பொதுப்பணித் துறை சார்பில், 3.5 கோடி ரூபாய் செலவில் லட்சுமி நகர் ஓடையில் மண் அரிப்பு ஏற்படாத வகையில், 20 அடி அகலத்திற்கு சிமெண்ட் சாலை போடப்பட்டது. அத்துடன் கரைகளையும் சிமெண்ட் சுவர் எழுப்பி பலப்படுத்தப்பட்டது.
இந்த வெள்ளவாரி சிமெண்ட் சாலையை கருவடிக்குப்பம் பகுதிகளுக்கு செல்ல குறுக்கு சாலையாக வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். பைக்குகள், ஆட்டோக்கள், சிறிய வேன்கள் இவ்வழியாக சென்று வருகின்றன.
ஆனால், சரியான திட்டமிடல் இல்லாததால் விமான நுழைவு வாயில் அருகே இந்த சிமெண்ட் சாலை துவங்குமிடத்தில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
இங்கு 4 அடியில் சிறிய சாய்வுதளம் அமைத்து, வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மற்ற 16 அடி அகலத்திற்கு சாய்வுதளம் இல்லாமல் செங்குத்தாக மெகா பள்ளத்துடன் விடப்பட்டுள்ளது. சாய்வு தளம் இல்லாத இடங்களில் தடுப்பு கட்டைகளும் இல்லை.
இதனால் இந்த ஓடை சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் லட்சுமி நகர் வழியாக செல்லும் வாகனங்கள் ஓடையில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. லட்சுமி நகர் வெள்ளவாரி ஓடையில் 20 அடி அகலத்திற்கு சிமெண்ட் சாலையை முழுதுமாக அமைத்து வாகன போக்குவரத்திற்கு வழி ஏற்படுத்த வேண்டும்.
இல்லையெனில் வெள்ளவாரி சிமெண்ட் சாலை துவங்கும் இடத்தில் 16 அடி அகலத்திற்கு பள்ளம் இருப்பதை எச்சரிக்கும் வகையில் தடுப்பு கட்டை அமைக்க வேண்டும்.
இதேபோல், லட்சுமி நகர் ஓடையில் 4 அடியில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறிய சாய்வுதளத்தில் கூட தடுப்பு கட்டை இல்லை.
சிறிது கவனம் சிறினாலும் வாகனங்கள் பள்ளத்தில் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இங்கும் தடுப்பு கட்டையை ஏற்படுத்த வேண்டும். மேலும் சாய்வுதளம் துவங்கும் இடத்தில் புதுச்சேரி விமானம் நிலையம் போகும் வழி என்று பெயர்பலகை வைக்கப்பட்டுள்ளது.
இந்த பெயர் பலகை, வாகனங்கள் ஏறும்போது, இறங்கும்போது பெரும் இடையூராக உள்ளது.
அதையும் பொதுப்பணித் துறை அகற்ற வேண்டும். விபத்து அபாயத்தினை கருத்தில் கொண்டு மூன்று விஷயங்களை சரிசெய்ய போர்க்கால அடிப்படையில் பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

