ADDED : ஜூன் 18, 2026 05:51 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் ரவுடி தகுடு சத்யாவை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.
குமரகுருபள்ளம், அரசு குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் லுாயிஸ் மகன் தகுடு சத்யா (எ) ஸ்டீபன்ராஜ், 38. பிரபல ரவுடியான இவர் மீது 5 கொலை வழக்குகள், ஒரு கொலை முயற்சி உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
குறிப்பாக, ரெயின்போ நகர் பகுதியில் மூன்று இளைஞர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார். தற்போது, லாஸ்பேட்டை இ.சி.ஆர். சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பொக்லைன் இயந்திரம் மீது நாட்டு வெடிக்குண்டு வீசியதுடன், தனது எதிரியை கொலை செய்ய ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தபோது, ரவுடி தகுடு சத்யாவை போலீசார் கைது செய்து, காலாப்பட்டு சிறையில் அடைந்தனர்.
சிறையில் உள்ள ரவுடி தகுடு சத்யா (எ) ஸ்டீபன்ராஜ் வெளியே வந்தால், புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, காலாப்பட்டு மத்திய சிறையில் இருக்கும் தகுடு சத்யா, வெளியே வராதபடி, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய போலீசார் கலெக்டருக்கு பரிந்துரை செய்திருந்தனர்.
இதையடுத்து, கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவின் பேரில், ரவுடி தகுடு சத்யா மீது கடந்த 16ம் தேதி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து, அதற்கான உத்தரவை காலாப்பட்டு சிறைத்துறை அதிகாரிகளிடம் நேற்று வழங்கினர்.
