ADDED : மே 25, 2026 07:41 PM
புதுச்சேரி: புதுச்சேரி நபரிடம் ரூ.73 ஆயிரம் மோசடி செய்தது குறித்து, சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி ராஜிவ் காந்தி நகரை சேர்ந்தவரை, மர்ம நபர் ஒருவர் டெலிகிராம் ஆன்லைன் செயலி மூலமாகத் தொடர்பு கொண்டு, வீட்டிலிருந்தபடியே பகுதிநேர வேலை செய்து தினமும் ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறினார்.
இதனை நம்பிய அவருக்கு, ஆரம்பத்தில் எளிய பணிகளை வழங்கி அதற்கு சிறிய தொகையை லாபமாகக் கொடுத்தனர். அதன் பிறகு, குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என கூறினர். அதனை நம்பி அவர் 73 ஆயிரத்து 450 ரூபாயை அனுப்பினார். பின் அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை செய்து முடித்தார். ஆனால் அவரால் லாபத்தை எடுக்க முடியவில்லை. பிறகே தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
இதேபோல், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த நபர் 18 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மோசடியில் இழந்தார். 2 பேரும் சேர்ந்து மொத்தம் 91 ஆயிரத்து 450 ரூபாயை ஆன்லைன் மோசடியில் இழந்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
