ADDED : மார் 22, 2024 05:44 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் கிரெடிட் கார்டில் சலுகை இருப்பதாக கூறி இருவரிடம் 76 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த சைபர் கிரைம் குற்ற வாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியை சேர்ந்த ரகு, 42; என்பவரின் மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர், வங்கி கிரெடிட் கார்டு பிரிவில் இருந்து பேசுவதாகதன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
அப்போது, வங்கி கிரெடிட் கார்டில் சலுகைகள் உள்ளது எனக் கூறி, அதற்கான கிரெடிட் கார்டு, வங்கி கணக்கு விபரங்களை கேட்டார்.
அதை நம்பி, அனைத்து விபரங்களையும் ரகு தெரிவித்தார். பின், மொபைல் போனுக்கு வந்த ஓ.டி.பி., எண்ணை அந்த நபர்வாங்கினார்.
அடுத்த நிமிடத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து 42 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது.
அதே போல, புதுச்சேரியை சேர்ந்த லோகநாதன், 47; என்பவரின் மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. அதில் வந்த லிங்கை கிளிக் செய்து, கிரெடிட் கார்டின் விபரங்களை லோகநாதன் பதிவு செய்தார். பின், மொபைல் போனுக்கு வந்த ஓ.டி.பி., எண்ணை பதிவு செய்த அடுத்த நிமிடத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்த 34 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது.
இது பற்றி, இருவரும் நேற்று புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

