புதுச்சேரியில் இனி மின் இணைப்பிற்கு சுய சான்றிதழ் போதும்: அரசாணை வெளியீடு
புதுச்சேரியில் இனி மின் இணைப்பிற்கு சுய சான்றிதழ் போதும்: அரசாணை வெளியீடு
ADDED : மே 15, 2026 10:11 PM
புதுச்சேரி: புதுச்சேரியில், மின் இணைப்பு வழங்க புதிய நடைமுறையை அமல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு, மாநிலத்தில் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் பொருட்டு மின் விநியோக நடைமுறைகளில் அதிரடியாக புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதில், இதுவரை, புதிய மின் இணைப்பு அல்லது கூடுதல் மின்சுமை கோரும்போது, மின் துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு முறையை ரத்து செய்து, சுய-சான்றளிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று, மின் இணைப்பு பெற உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரரின் சான்று இனி தேவையில்லை. நுகர்வோரின் சுய-சான்றளிப்பு போதுமானது.
இனி, கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான கூட்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அங்கீகரித்த நிலையான கட்டணங்களே வசூலிக்கப்படும். புதிய உள்கட்டமைப்புகளில் மின்மாற்றிகள் அல்லது கம்பிகள் தேவைப்படாத இடங்களில், விண்ணப்பிக்கும் போதே இணையதளத்தில் கட்டணம் செலுத்தலாம். உள்கட்டமைப்பு தேவைப்படும் இடங்களில், பணிகள் முடிந்ததும் கட்டணம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. மீட்டர் பாதுகாப்பு வைப்புத்தொகை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றது.
மின் துறையின் கண்காணிப்பு பொறியாளர் பரிந்துரைகளை ஏற்று, நிர்வாகச் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் புதிய சீர்திருத்தத்தின் மூலம் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு பெரும் பயனுள்ளதாக அமையும் என தொழில் துறையினர் வரவேற்றுள்ளனர்.
