/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிடப்பில் போடப்பட்ட திரைப்பட நகர பணி
/
கிடப்பில் போடப்பட்ட திரைப்பட நகர பணி
ADDED : மே 07, 2024 05:52 AM

புதுச்சேரி : புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம், சுற்றுலா தளங்கள், பிரஞ்சு கட்டட கலை நயத்துடன் கூடிய கட்டடங்களை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். இதனால் சுற்றுலா துறையில் புதுச்சேரி அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.
புதுச்சேரியின் அழகிய வீதிகள், பூங்கா உள்ளிட்ட இடங்களில் சினிமா படப்பிடிப்புகள் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இங்கு, சினிமா திரைப்பட நகரம் அமைக்க தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதனை ஏற்று கடந்த 2007ம் ஆண்டு, மணப்பட்டு கிராமத்தில் 100 ஏக்கரில் சினிமா திரைப்பட நகரம் அமைக்க முடிவு செய்து, முதற்கட்டமாக 40 ஏக்கர் நிலத்தை அரசு கையப்படுத்தியது. ரூ.1 கோடி ஒதுக்கி முதல்வர் ரங்கசாமி அப்போது பூர்வாங்க பணிகளை துவக்கி வைத்தார். நிதி நெருக்கடி காரணமாக பணிகள் தொடரவில்லை.
கடந்த 2018 ம் ஆண்டு மத்திய அரசின் சுதேசி தர்ஷன் திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடி செலவில், மணப்பட்டு - மூ.புதுக்குப்பம் கடற்கரையில் மரத்தால் செய்யப்பட்ட குடில்கள், சிறுவர்கள் விளையாட்டு பூங்கா, உணவகம், கழிப்பறைகள், நடைபாதை, சோலார் மின் விளக்குகள் அமைக்கப்பட்டது. ஆனால் திட்டம் முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டது.
இதனால் அங்கு அமைக்கப்பட்டு இருந்த சோலார் பேனல், மின் கம்பி, மின் விளக்குகள் திருடு போனது. இதனால், இருண்டு கிடக்கும் சுற்றுலா நகர பகுதியில் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகிறது.
சில மாதங்களுக்கு முன் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் பொழுதுபோக்கு பூங்காவுடன் அமையும் திரைப்பட நகரம் திட்டத்தை விரைவுப்படுத்த உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து, திரைப்பட நகர கட்டுமான பணி குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க குழு (கன்சல்டன்ட்) அமைக்கப்பட்டது.
இக்குழு இடத்தை ஆய்வு செய்து தனியார் முதலீடு மூலம் பி.பி.ஏ., முறையில் கட்டுமான பணியை மேற்கொண்டு, 33 ஆண்டுகள் பயன்பாட்டிற்கு வழங்க அறிக்கை தயார் செய்து வருகிறது.
பொழுதுபோக்கு பூங்காவுடன் கூடிய திரைப்படம் நகரத்தில் என்னென்ன வசதிகள் அமைய வேண்டும் என்பதை அறிக்கையாக சமர்ப்பித்த பின்பு உலக அளவிலான டெண்டர் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.