ADDED : மார் 14, 2025 04:32 AM

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில், இந்திய பொறியாளர்கள் நிறுவனத்தின் தெற்கு மண்டல மாணவர் மாநாடு துவக்க விழா நடந்தது.
பல்கலைக்கழக கலையரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு கணிப்பொறி துறை தலைவர் இளவரசன் வரவேற்றார். தொழில்நுட்ப பல்கலைக்கழக துணை வேந்தர் மோகன் தலைமை தாங்கி, உலகளவில் பெருவளர்ச்சி பெற்று வரும் இந்த நவீன தொழில் நுட்பம் கருதி, கடந்த 2020ம் ஆண்டு முதல் இப்பல்கலை.,யில் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் முதுகலை படிப்பு துவக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறுவதாகவும் கூறினார்.
கல்வி மற்றும் புத்தாக்க இயக்குனர் விவேகானந்தன், இந்திய பொறியாளர்கள் அமைப்பின் புதுச்சேரி மாநிலத்தலைவர் திருஞானம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக சென்னை இந்திய தொழில் நுட்பக்கழகத்தின் தகவல் அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறை தலைவர் பலராம் ரவீந்திரன் பேசுகையில், ஸ்மார்ட் நகரங்கள், ஸ்மார்ட் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த துறைகளில் ஏ.ஐ., மற்றும் ஐ.ஓ.டி., யின் பயன்பாடுகள் குறித்து பேசினார். மாநாடு ஒருங்கிணைப்பாளர் தேன்மொழி நோக்கவுரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பல்கலை., துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தென்னிந்தியாவின் பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்திய பொறியாளர்கள் அமைப்பின் மாநில பொருளாளர் சவுந்தர்ராஜன் நன்றி கூறினார்.