மத்திய அரசின் டிஜிட்டல் கரன்சி திட்டத்தில் இணைக்க சிகப்பு நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு சிறப்பு முகாம்
மத்திய அரசின் டிஜிட்டல் கரன்சி திட்டத்தில் இணைக்க சிகப்பு நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு சிறப்பு முகாம்
ADDED : மே 21, 2026 05:12 PM

புதுச்சேரி: குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குனர் முத்துமீனா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி புதுச்சேரி மாநிலத்தில் மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி திட்டம் குடிமைப்பொருள் வழங்கல் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் ரேஷன் அட்டைதாரர்கள் (முன்னுரிமை குடும்பங்கள் (பி.எச்.எச்.), அந்த்யோதயா அன்ன யோஜனா (ஏ.ஏ.ஓய்.) ஆதார் அடிப்படையிலான அங்கீகாரம் மூலம் டிஜிட்டல் ‘வாலெட்’ உருவாக்கி டிஜிட்டல் கரன்சி திட்டத்தின் இணைக்க சிறப்பு முகாம்கள் நேற்று (வியாழக்கிழமை) முதல் கட்டமாக நெட்டப்பாக்கம், ஏம்பலம் மற்றும் மணவெளி பகுதிகளில் துவங்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகள் விவரம்:
மக்களின் வசதிக்காக கீழ்கண்ட அரசு பள்ளிகளில், அதனுடன் தொடர்புடைய ரேஷன் கடை பயனாளிகளுக்காக முகாம்கள் நடத்தப்படுகின்றன.
–––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––
ஊர் அரசு பள்ளி ரேஷன் கடை எண்
––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––
நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி 86, 218.
பண்டசோழநல்லூர் வள்ளலார் அரசு உயர்நிலைப் பள்ளி 56, 157, 347
கோர்காடு அரசு மேல்நிலைப் பள்ளி 82, 84
ஏம்பலம் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப்பள்ளி 85,194, 237, 316
கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி 83,370, 348
மணவெளி அரசு தொடக்கப்பள்ளி 62, 65
நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி 326
தவளக்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளி 66
பூரணாங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளி 155, 329
புதுக்குப்பம் அரசு தொடக்கப்பள்ளி 116
––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––
இந்த ரேஷன் கடைகளுடன் தொடர்புடைய பயனாளிகள் முகாம்களில் பங்கேற்று பதிவு செய்து கொள்ள வேண்டும். முகாமிற்கு வருபவர்கள் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை நகல், ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். முகாம்களில் வங்கி அலுவலர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் துறை அலுவலர்கள் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்குவார்கள்.
புதுச்சேரியின் பிற பகுதிகளில் இதுபோன்ற முகாம்கள் விரைவில் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
