sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரியில் கறவை மாடுகளுக்கு அதிநவீன கருவூட்டல் திட்டம் துவக்கம்

/

புதுச்சேரியில் கறவை மாடுகளுக்கு அதிநவீன கருவூட்டல் திட்டம் துவக்கம்

புதுச்சேரியில் கறவை மாடுகளுக்கு அதிநவீன கருவூட்டல் திட்டம் துவக்கம்

புதுச்சேரியில் கறவை மாடுகளுக்கு அதிநவீன கருவூட்டல் திட்டம் துவக்கம்


ADDED : ஜூலை 04, 2024 03:18 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 03:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில், கறவை மாடுகளுக்கு அதிநவீன கருவூட்டல் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நலன் கருதி, இந்த திட்டம் புதுச்சேரியில் முழுதுமாக இலவசமாக செயல்படுத்தப்பட உள்ளது.

உயர் ரகங்களை சேர்ந்த காளை மாடுகளிடம் இருந்து விந்தணுக்களை சேகரித்து, கறவை மாடுகளுக்கு சினை ஊசி மூலமாக செலுத்தும் செயற்கை கருவூட்டல் திட்டமே பரவலாக நடைமுறையில் உள்ளது.

நாளுக்கு நாள் பாலின் தேவை அதிகரித்து வரும் சூழ்நிலையில், பால் உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கும் நோக்கத்தில், மத்திய அரசின் 'ராஷ்ட்ரிய கோகுல் மிஷன்' திட்டத்தின் கீழ் அதிநவீன கருவூட்டல் திட்டம் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

வாடகை தாய்


இதன்படி, உயர்ரக, கலப்பின, பாலினம் பிரிக்கப்பட்ட கருக்களை கொண்டு செயற்கை கருவூட்டல் முறையில் பெண் கன்றுகளை ஈனும் திட்டம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.

அதாவது, தினசரி 25 லிட்டர், 30 லிட்டர் என அதிகமாக பால் தரும் உயர் ரக பசுக்களின் கரு முட்டைகள் சேகரிக்கப்படும். ஆறு நாட்களான கரு முட்டைகளுடன், உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த உயர் ரக காளைகளின் விந்தணு சேர்க்கப்பட்டு, ஐதராபாத்தில் உள்ள ஆய்வகத்தில் செயற்கை கருவூட்டல் செய்யப்படும்.

இதன் மூலமாக உருவாகும் கரு, கறவை மாடுகளின் கர்ப்பப்பையில் நேரடியாக செலுத்தப்படும். இந்த முறையில் கருவூட்டப்படும் கறவை மாடுகள், பெரும்பாலும் பெண் கன்றுகளையே ஈனும் என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும், வாடகை தாயாக செயல்படும் தாய் மாட்டின் குணங்களையும், மரபணு குணங்களையும் கொண்டிருக்காமல், கரு முட்டை எடுக்கப்பட்ட உயர் ரக மாடுகளைபோல அதிக அளவில் பால் கறக்கும்.

இதனால், நாள் ஒன்றுக்கு சராசரியாக பெறப்படும் பாலின் அளவு அதிகரிக்கும். எனவே, பால் உற்பத்தி அதிகரிப்பதுடன் விவசாயிகளின் வருமானமும் உயரும்.

ஐதராபாத் ஆய்வகம்


'இன் விட்ரோ பெர்டிலைசேஷன்' (ஐ.வி.எப்.,) எனப்படும் இந்த அதிநவீன கருவூட்டல் திட்டத்தின் கீழ், ஐதராபாத்தில் உள்ள ஆய்வகத்தில் கரு முட்டைகளும், விந்தணுவும் சேர்க்கப்பட்டு கரு உருவாக்கப்படுகிறது.

இந்த உயர்ரக கருக்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டு, விமானம் மூலமாக சென்னைக்கு எடுத்து வரப்படும்.

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு எடுத்து வரப்பட்டு, கறவை மாடுகளுக்கு செலுத்தப்படும். இதற்காக கறவை மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை முடிந்து, ஹார்மோன் ஊசி செலுத்தப்பட்டு தயார் செய்யப்பட்டு இருக்கும்.

இந்த திட்டத்தின் கீழ் நடப்பாண்டில், புதுச்சேரியில் 400 மாடுகளும், காரைக்காலில் 100 மாடுகளும் கருவூட்டல் செய்யப்பட உள்ளது. இதன் மூலமாக, அதிகளவு பால் தரும் 400 ஜெர்சி கலப்பின மாடுகள் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

இதுமட்டுமல்லாமல், பாரம்பரிய கறவை மாடு ரகங்களை மீட்டெடுக்கும் வகையில் 15 கிர் ரக மாடுகள், 15 ஷாகிவால் ரக மாடுகள், 70 முர்ரக் எருமைகள் செயற்கை கருவூட்டல் மூலம் பெறப்பட உள்ளது.

100 சதவீத மானியம்


ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ஐ.வி.எப்., அதிநவீன கருவூட்டல் திட்டத்தின் செயற்கை கருவூட்டல் ஒன்றுக்கு 21 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. இதில், மத்திய அரசின் பங்காக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

மீதமுள்ள 16 ஆயிரம் ரூபாயை கால்நடை விவசாயிகள் செலுத்த வேண்டும். இருந்தபோதும், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு 16 ஆயிரம் ரூபாயை புதுச்சேரி அரசே மானியமாக வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டிலேயே புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் தான், இந்த அதிநவீன கருத்தரிப்பு செய்யும் திட்டம் இலவசமாக செயல்படுத்தப் படுகிறது.

ஐ.வி.எப்., அதிநவீன கருவூட்டல் திட்டத்தை மேல்சாத்தமங்கலம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.






      Dinamalar
      Follow us