ADDED : மார் 26, 2024 04:56 AM

புதுச்சேரி: லோக்சபா தேர்தலை முன்னிட்டு காங்., வேட்பாளருக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி, திருக்கனுார் சாலையோர கடையில் டீ குடித்தப்படி ஆதரவு திரட்டினார்.
புதுச்சேரி லோக்சபா தேர்தலில் காங்., வேட்பாளராக வைத்திலிங்கம் எம். பி., போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்றிரவு மண்ணாடிபட்டு தொகுதி கொடாத்துார், கூனிச்சம்பட்டு, மண்ணாடிப்பட்டு கிராமங்களில் உள்ள இண்டியா கூட்டணி நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்களை வீட்டில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
தொடர்ந்து, திருக்கனுார் பஜார் வீதியில் உள்ள சாலையோரக் கடையில் அமர்ந்து டீ குடித்தப்படி பொது மக்களிடம் காங்., கட்சிக்கு ஓட்டு அளிக்க கேட்டுக் கொண்டார்.
இதில், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ ஆனந்த ராமன், மாநில செயலாளர்கள் சுரேஷ், முத்துரங்கம், வட்டாரத் தலைவர் பரமசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.

