ADDED : மே 19, 2026 06:20 PM
புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ததால், தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சட்டசபை செயலாளர் தயாளன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரியில் 16வது சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடந்து, கடந்த 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில், மங்கலம் மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் ரங்கசாமி, இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.
இதையடுத்து, தட்டாஞ்சாவடி தொகுதிக்கான எம்.எல்.ஏ., பதவியை கடந்த 17 ம் தேதி மாலை முதல்வர் ரங்கசாமி ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தார். அவரது ராஜினாமா கடிதம் தற்காலிக சபாநாயகர் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 17 ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதை தொடர்ந்து, தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
