ADDED : மார் 22, 2024 10:33 PM
புதுச்சேரி : சுற்றுலா பயணிகளின் காரை உடைத்து சேதப்படுத்திய சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், சாமிசெட்டிபட்டு, கீழ் தெருவைச் சேர்ந்தவர் தினா, 22; தனியார் ஸ்கேன் சென்டர் டெக்னிஷியன். இவரது நண்பர்கள் சக்திவேல், 32; பூபதி, 19; கோபி, 26; ஆகியோர் கடந்த 21ம் தேதி காரில் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர்.
சங்கரதாஸ் வீதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கிய நால்வரும், ஆரோவில் சென்று இரவு 8:00 மணிக்கு ஓட்டல் அறைக்கு திரும்பினர். அண்ணா சாலை, சேது நர்சிங் ஹோம் அருகே வந்தபோது, கார் அருகில் சென்ற பைக் மீது உரசுவதுபோல் சென்றது.
இதனால் பைக்கில் வந்த இருவர் காரை நிறுத்துமாறு கூறினர். ஆனால், தினா மற்றும் அவரது நண்பர்கள் காரை வேகமாக ஓட்டிக் கொண்டு 45 அடி சாலை வழியாக சென்றனர்.
பின்னால் துரத்தி வந்த இருவரும், ரெயின்போ நகர் அருகே காரை வழிமறித்து நிறுத்தினர். பின்பு காரின் முன்பக்க மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகளை அடித்து உடைத்துடன், காரில் வந்த தினா மற்றும் அவரது நண்பர்களை தாக்கினர். அக்கம்பக்கத்தினர் சமாதானம் செய்த பின்பு, இருவரும் அங்கிருந்து சென்றனர்.
இது குறித்து தினா பெரியக்கடை போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், காரை அடித்து உடைத்தது, முதலியார்பேட்டை வாரியார் நகர் முத்துவேல் மகன் நாராயணமூர்த்தி, 23; அவரது சகோதரர் வேலன், 21; என தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
