/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் வழுக்கி விழுந்த வாகன ஓட்டிகள் தண்ணீர் பீய்ச்சி அடித்து சரிசெய்த தீயணைப்பு துறை

ADDED : மே 09, 2024 04:28 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில், துாங்குமூஞ்சி மரம் காய்கள் நசுங்கி வழுவழுப்பு தன்மை ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்தனர்.
புதுச்சேரி நகர பகுதி மற்றும் கிராம பகுதியில் நேற்று காலை திடீரென மழை பெய்தது. லாஸ்பேட்டையில் பெரிய அளவில் மழை இல்லை. லேசான சாரல் மழை பெய்தது. அதற்கு முன்னதாக காற்று பலமாக வீசியது.
காற்று காரணமாக மரங்களில் காய்ந்த இலை, பழங்கள், பூக்கள் விழுந்தன. லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையோரம் ஏராளமான மரங்கள் உள்ளது. இதில், பெண்கள் அரசு பொறியியல் கல்லுாரி மதில் சுவர் ஓரம் 'ரெயின் டிரீ' என அழைக்கப்படும் துாங்குமூஞ்சி மரம் உள்ளது.
வேகமாக வீசிய காற்று காரணமாக துாங்குமூஞ்சி மரத்தில் இருந்த காய், பழங்கள் சாலையில் விழுந்தது. இந்த காய்கள் மீது கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்றபோது நசுங்கி பிசின் போன்று உருவானது. அத்துடன் லேசான மழையும் சேர்ந்து கொண்டதால், சாலை வழுவழுப்பாக மாறியது.
அப்போது ஏர்போர்ட் சாலையில் சென்ற 10க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்தனர். உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கோரிமேடு தீயணைப்பு நிலைய அதிகாரி சுரேஷ் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள், சாலையில் படர்ந்து இருந்த வழுவழுப்பு தன்மையை தண்ணீர் பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தனர்.
இதேபோல் லாஸ்பேட்டை உழவர்சந்தை அருகிலும் வாகன ஓட்டிகள் சாலையில் வழுக்கி விழுந்தனர்.
அந்த சாலை பகுதியையும் தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து சரிசெய்தனர். அதன்பின் வாகன ஓட்டிகள் வழுக்கி விழாமல் சாலையை கடந்து சென்றனர்.