/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆசிட் ஊற்றி மரம் சாய்க்கப்பட்ட விவகாரம் புகாருக்காக காத்திருக்கிறது வனத்துறை
/
ஆசிட் ஊற்றி மரம் சாய்க்கப்பட்ட விவகாரம் புகாருக்காக காத்திருக்கிறது வனத்துறை
ஆசிட் ஊற்றி மரம் சாய்க்கப்பட்ட விவகாரம் புகாருக்காக காத்திருக்கிறது வனத்துறை
ஆசிட் ஊற்றி மரம் சாய்க்கப்பட்ட விவகாரம் புகாருக்காக காத்திருக்கிறது வனத்துறை
ADDED : ஏப் 04, 2024 12:36 AM
புதுச்சேரி: மிஷன் வீதியில் மரத்திற்கு ஆசிட் ஊற்றி சாய்க்கப்பட்ட விவகாரத்தில், நிலத்தின் உரிமையாளரான பொதுப்பணித்துறை புகார் அளிக்கவில்லை என, வனத்துறை கைவிரித்துள்ளது.
புதுச்சேரி மிஷன் வீதி, வ.உ.சி. பள்ளி எதிரில் 40 ஆண்டுகள் பழமையான மதிமாங்கா என்ற வகையை சேர்ந்த மரம் திடீரென முறிந்து சாலையில் விழுந்தது. தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். மரம் முறிந்து விழுந்தில் வாலிபர் ஒருவர் காயமடைந்தார். 4 பைக்குகள் சேதமடைந்தது.
வனத்துறை ஆய்வில், மரத்தின் அடிபாகத்தில் துளையிட்டு ஆசிட் உற்றி மரத்தை சாய்த்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியானது. ஆசிட் ஊற்றிய பாகம் உள்ளிட்ட மாதிரிகளை வனத்துறை கைப்பற்றி ஆய்வுக்கு எடுத்து சென்றது. ஆனால் ஆசிட் ஊற்றியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மரத்தை வெட்டி அகற்றிய பின்பு அவரவர் சொந்த பணிக்கு திரும்பி விட்டனர்.
வனத்துறையிடம் கேட்டபோது, 'மரம் இருந்த இடம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பகுதி. அதனால், மரமும் அத்துறைக்கு உரிமையானது. அந்த துறையினர் முறைப்படி புகார் அளிக்க வேண்டும். அதற்கு முன்னாதாகவே ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டது தொடர்பாக மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. புகார் அளிக்கப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
தனியார் இடத்தில் உள்ள மரத்தை வெட்டுவதிற்கு கூட வனத்துறையில் முறைப்படி அனுமதி பெற வேண்டும். அரசாங்க இடமான பொதுப்பணித்துறையின் சாலையில் இருந்த பழமையான நிழல் தரும் மரத்தை மர்ம நபர்கள் ஆசிட் ஊற்றி சாய்த்துள்ள விவகாரத்தில், புகாருக்காக வனத்துறை காத்திருப்பது வியப்பை அளிக்கிறது.
இதுபோன்ற விஷயங்களில் மெத்தனமான நடைமுறைகள் தொடர்ந்தால், நகரில் மரங்களை எதிர்காலத்தில் மியூசியத்தில் மட்டுமே பார்க்க முடியும். எனவே, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

