ADDED : மே 23, 2026 11:32 PM
முத்தியால்பேட்டை முத்துக்குமாரசாமி வீட்டில் தங்கியிருந்த சுவாமிகள், துாய்மையான அன்பர்கள் தம்மை அழைத்தால் மறுக்காது அவர்கள் வீட்டிற்குச் செல்வது வழக்கமாம். அவ்வாறு, குயவர்பாளையத்தில் வசித்த முத்துசாமி பத்தர் என்னும் அருளன்பரின் வீட்டிற்கு சென்ற சுவாமிகள் நெல்லித்தோப்பு வழியாக வந்து கொண்டிருக்கையில் ஒரு குடிகாரன் சுவாமிகளை இடைமறித்து, ஓ சாமி சாராயம் குடிக்கிறாயா ? இந்தா குடி, சும்மா குடி என்று சுவாமிகளிடம் சாராயப் புட்டியைக் கொடுத்துள்ளான். கடைக்கார முதலாளியைப் பார்த்து இந்தா சாமிக்கு வேண்டிய மட்டும் சாராயம் கொடு என்று அகங்காரமும் திமிரும் கொண்டு அதிகாரத் தோரணையில் கூறியுள்ளான்.
அனைத்திலும் ஆண்டவனைக்காணும் சுவாமிகளுக்கு சாராயம் ஒன்று உண்டோ? சுவாமிகள் சாராயத்தைப் பருகியுள்ளார். நிறையப் பருகியுள்ளார். பருகப்பருக சாராயத்தில் இருந்த போதைப்பொருள் திமிருடன் சுவாமிகளை சாராயம் குடிக்கச் சொன்ன குடிகார முரடனுக்கு ஏறியுள்ளது. தலைக்கு ஏறியுள்ளது. வினைவிதைத்தவன் வினையை அறுப்பான். மயங்கினான். மயக்கமுற்றுக் கீழே விழுந்தான். கல்லானான். சுவாமிகள் சிரித்துக் கொண்டே மறைந்து விட்டார்.
மணிகள் ஓடின. அவன் எழுந்திருக்கவில்லை. உற்றார் உறவினர் ஓலமிட்டனர். பின் செய்தியறிந்தனர். சுவாமிகளைக்கண்டு தவற்றைக்கூறி அழுதார்கள். கருணையே உருவமாகிய சுவாமிகள், அங்கு சென்று அவனை மன்னித்தார். அவன் மயக்கத் தெளிந்தான். மன்னிப்புக் கேட்டான். சுவாமிகள் ஆசி அருளினார். திமிர் பிடித்தவனையும் மன்னிக்கும், சுவாமிகளின் அருளுள்ளம் இதுதான்.
000000000000000000000000000000000
அம்மனின் அருளை பெற்ற சித்தானந்தர்
தெய்வீக குழந்தையாக இருந்த குரு சித்தானந்த சுவாமிகள், இளம் வயதில் கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வர் கோவிலில் தொண்டாற்றினார். தாயார் கொடுத்து அனுப்பிய பூ மாலைகளை இறைவனுக்கு கொண்டு சென்று சேர்த்தார். அவ்வாறு ஒருமுறை, தாயார் கொடுத்தனுப்பிய பூமாலைகளை, கொண்டு செல்லும் பொழுது, கடுமையான மழையின் காரணத்தினால் சமயத்தில் கொண்டு போய் சேர்க்கமுடியவில்லை.
கோவிலின் கதவுகள் மூடியபிறகு போய் சேர்ந்ததால், கதவிலேயே மாலை மாட்டிவிட்டு, விட்டு-இறைவா, உனக்கு தேவையானால் நீயே வந்து எடுத்துக் கொள் என்று சொல்லி வந்து விட்டார். மறுநாள் கோவில் அர்ச்சகர், சித்தானந்தரிடம் நேற்று ஏன் மாலை கொண்டு வரவில்லை என்று கேட்க, தான் கதவிலே மாட்டிவிட்டு விட்டு வந்ததையும், இறைவனுக்கு தேவைப்பட்டால் அவரே எடுத்து கொண்டிருப்பார் என்றும் சொன்னார்.
அர்ச்சகர் சிரித்து விட்டு போய் பார்க்க கோவில் பூட்டப்பட்டிருந்தது. கதவில் மாட்டியதாக கூறப்பட்ட மாலையை காணவில்லை. உள்ளே சென்று பார்க்க இறைவனை அம்மாலை அலங்கரித்திருக்கக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனார். உடனே சித்தானந்தனின் கால்களில் விழுந்து வணங்கினார். சித்தானந்தனின் சொற்கள் பலித்தன.
00000000000000000000
ஜீவசமாதி வழிபடும் முறை
அக்காலத்தில் இருந்த ஆன்மீக அருளாளர்கள் சித்தர்களின் ஜீவசமாதிகளை கோவில்களாக மாற்றினார்கள். எந்த மகான் எந்த கடவுளின் மீது பிரியமாக இருந்தாரோ, அல்லது எந்த கடவுளை வழிபட்டாரோ அந்த தெய்வத்தின் சிலை அவரது ஜீவசமாதியின் மீது அல்லது அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பெரும்பாலான மகான்களும், சித்தர்களும் சிவனை வழிபட்டிருக்கின்றனர்.
முடிந்தவரை ரோஜாப்பூக்களால் கட்டப்பட்ட மாலை, டைமண்டு கல்கண்டு, கறுப்பு திராட்சைப்பழங்கள், பேரீட்சைப்பழங்கள் இத்துடன் வெற்றிலை பாக்கு, வத்தி, வாழைப்பழங்கள், தேங்காய் இவற்றில் எது முடியுமோ அவற்றைக் கொண்டு வந்து, ஜீவசமாதிக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஜீவசமாதி வழிபாடு செய்பவர்கள் அன்று கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்தியாக வேண்டும்.
பூமி, சந்திரன் அதன் சுழற்சியினால் ஏற்படும் அமாவாசை, பவுர்ணமி தினங்களில் கடலில் அலைகள் வழக்கத்துக்கு மாறாக அதிகளவில் ஆர்ப்பரிக்கும். அன்னைய தினங்களில் தியானம் செய்தால் தியானத்தன்மை இயற்கையின் உதவியால் இயல்பாக அதிகரிக்கும். அன்றைய தினங்களில் ஜீவசமாதிகளில் மற்ற நாட்களை விட அதிகளவில் அதிர்வை வெளிப்படுத்தும்.
பொதுவாக ஜீவசமாதியில் இருக்கும் ஆன்மீக நபர் உடலளவில் இறந்தபோதும் உடல் தாண்டிய நிலையில் சூட்சம அளவில் அங்கே செயல்படுவார்.
