ADDED : மே 21, 2024 05:10 AM
புதுச்சேரி: நுாறடிச்சாலை வங்கிக்குள் புகுந்து ஊழியர்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி நுாறடிச்சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் கிருத்திகாதேவி என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் கல்யாண், 43; குடும்ப பிரச்னை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கல்யாண் அடிக்கடி வங்கிக்குள் சென்று, கிருத்திகாதேவியிடம் தகராறு செய்து வந்தார். கடந்த வாரம் மட்டும் 3 முறை வங்கிக்குள் வந்து கிருத்திகாதேவியிடம் தகராறு செய்தார்.
இந்த நிலையில், நேற்று கிருத்திகாதேவி பணிக்கு வரவில்லை. இதை அறிந்து கொண்ட கல்யாண், நேற்று மதியம் 1:30 மணிக்கு வங்கிக்குள் சென்று, அங்கிருந்த வங்கி பணியாளர்களை அசிங்கமாக திட்டி, அனைவரையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டி ரகளையில் ஈடுபட்டார்.
வங்கி ஊழியர்கள் கல்யாணை பிடித்து ரெட்டியார்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.
வங்கி கிளை மேலாளர் சீனிவாசன் அளித்த புகாரின்பேரில், கல்யாண் மீது கொலை மிரட்டல், வங்கிக்குள் அத்துமீறி நுழைதல், பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
