உளுந்துார்பேட்டையில் அருகே இரு வாகன விபத்தில் இருவர் பலி
உளுந்துார்பேட்டையில் அருகே இரு வாகன விபத்தில் இருவர் பலி
ADDED : மே 31, 2026 09:50 PM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே அடுத்தடுத்து ஏற்பட்ட இரு வாகன விபத்தில் இரு டிரைவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
சென்னை வேளச்சேரி சேர்ந்த பச்சமுத்து மகன் மாரிமுத்து, 37; டிரைவர். இவர் மினி பஸ் சேஸ் கட்டுவதற்கான வாகனத்தை எடுத்து கொண்டு சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்றார். நேற்று அதிகாலை 4.30 மணிக்கு உளுந்துார்பேட்டை அடுத்த செங்குறிச்சி அருகே வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு கட்டையில் சேஸ் வாகனம் மோதி, எதிர் திசையில் தேவகோட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் டிராவல்ஸ் பஸ் மீது மோதியது.
தடுப்பு கட்டையில் மோதியபோது கீழே விழுந்து படுகாயமடைந்த மினி பஸ் சேஸ் வாகன டிரைவர் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார். சேஸ் வாகனம் மோதியதில் தனியார் டிராவல்ஸ் பஸ் சேதமான நிலையில், பஸ்சில் பயணித்த பயணிகள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.
இவ்விபத்தினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. அப்போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற தனியார் டிராவல்ஸ் பஸ்சுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த பொலிரோ பிக் வாகனம் பஸ் மீது மோதியது. அதில் பொலிரோ பிக் வாகன டிரைவர் சேலம் மாவட்டம், மேச்சேரி கொண்டபட்டி சேர்ந்த ராஜ்குமார் மகன் சுதர்சன், 21; சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதனையடுத்து உளுந்துார்பேட்டை போலீசார் சாலை விபத்தில் அடுத்தடுத்து இறந்த இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
