/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க உழவர்கரை நகராட்சி நடவடிக்கை
/
டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க உழவர்கரை நகராட்சி நடவடிக்கை
டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க உழவர்கரை நகராட்சி நடவடிக்கை
டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க உழவர்கரை நகராட்சி நடவடிக்கை
ADDED : மே 27, 2024 05:08 AM
புதுச்சேரி: குடியிருப்பு, வியாபார பகுதிகளில் நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் குழு ஆய்வு மேற்கொண்டு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால், மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவ அதிக வாய்ப்புள்ளது.
அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலிமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகளின் தரை தளங்கள், கட்டுமான வேலைகள் நடைபெறும் கட்டடங்களில் உள்ள நீர் தேக்க தொட்டிகள், மொட்டை மாடி, வீட்டினை சுற்றி உள்ள காலி இடங்களில் குப்பைகள் மற்றும் தண்ணீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் வியாபார நிறுவனங்கள், உணவகங்கள், சாலையோர கடைகள், தங்களிடம் உருவாகும் குப்பைகள் மற்றும் கப்புகள், தண்ணீர் பாட்டில்கள், போன்றவற்றை சாலையோரங்கள், கால்வாய் மற்றும் காலிமனைகளில் வீசக்கூடாது.
அந்த குப்பைகளை சேகரிக்க வரும் ஸ்வச்சதா கார்ப்பரேஷன் ஊழியர்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து, அதன் உரிமையாளர்கள் வழங்க வேண்டும்.
மேலும் சாலையோரங்களில் இளநீர் மற்றும் நுங்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் அதன் கழிவுகளை அங்கேயே விட்டு செல்லாமல் தாங்களாகவே, அதனை அப்புறப்படுத்த வேண்டும்.
நகராட்சி மற்றும் சுகாதாரத்தறை ஊழியர்கள் கொண்ட குழு, வரும் நாட்களில் அனைத்து குடியிருப்பு மற்றும் வியாபார பகுதிகளில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.
பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பரவலாக விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.
டெங்குநோய் அதிகமாக பரவும் வாய்ப்புள்ளதால், கால்வாயில் உள்ள அடைப்புகள், சகதிகளை அகற்றும் பணிகள் மற்றும் தொகுதிவாரியாக கொசு மருந்து அடிப்பதற்கு நகராட்சியில் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு, தினந்தோறும், பணிகள் நடைபெற்று வருகிறது.
உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கொசுத்தொல்லைகள் தொடர்பான புகார்கள் இருந்தால், நகராட்சி கட்டுப்பாட்டு அறை தொலைபேசி 0413-2200382 மற்றும் 7598171674, வாட்ஸ் ஆப்பில் புகார்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

