/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உப்பளம் அம்பேத்கர் சாலை அகலப்படுத்தும் பணி
/
உப்பளம் அம்பேத்கர் சாலை அகலப்படுத்தும் பணி
ADDED : ஜூன் 08, 2024 04:41 AM

புதுச்சேரி : உப்பளம் அம்பேத்கர் சாலை ரூ. 1.10 கோடி செலவில், கூடுதலாக 27 அடி அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
உப்பளம், அம்பேத்கர் சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்தது. இச்சாலையில் உப்பளம் ரயில்வே கேட் அருகே பிரபல தனியார் பள்ளி உள்ளது. தேங்காய்த்திட்டு, வாணரப்பேட்டை, ஜான்பால் நகரில் உள்ள 3 தனியார் பள்ளிக்கு மாணவர்கள் இச்சாலை வழியாக செல்கின்றனர்.
இதனால் காலை மாலை நேரத்தில் இச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக, சோனாம்பாளையம் ரயில்வே கேட் முதல் இந்திரா காந்தி விளையாட்டு மைதானம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
இதற்கு தீர்வு காண பொதுப்பணித்துறை முடிவு செய்தது. சோனாம்பாளையம் ரயில்வே கேட்டில் இருந்து இந்திரா காந்தி மைதானம் வரை சாலையோரம் 10 அடி அகலத்தில் இருந்த வாய்க்கால் மற்றும் நடைபாதை இடித்து அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி, ரூ. 1.10 கோடி செலவில், பெத்திசெமினார் பள்ளி பக்கம் 10 அடியும், அசோகா ஓட்டல் பக்கம் 17 அடி சாலையை விரிவாக்கம் செய்யும் பணி பொதுப்பணித்துறை மத்திய கோட்டம், கட்டடம் மற்றும் சாலை பிரிவு சார்பில் நடந்து வருகிறது. இதன் மூலம் தற்போதுள்ள சாலையுடன், கூடுதலாக 27 அடி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில் பணிகள் முடிந்து தார் சாலை அமைக்கப்பட உள்ளது.
இதன் மூலம் தனியார் பள்ளிக்கு வரும் வாகனங்கள் சாலையோரம் நிறுத்தவும், மற்ற வாகனங்கள் போக்குவரத்து சிக்கல் இன்றி எளிதாக கடந்து செல்லவும் வழி உருவாகி உள்ளது.