அ.தி.மு.க.,வில் ஒற்றுமையாக உள்ளோம் அருண்மொழிதேவன் திட்டவட்டம்
அ.தி.மு.க.,வில் ஒற்றுமையாக உள்ளோம் அருண்மொழிதேவன் திட்டவட்டம்
ADDED : மே 30, 2026 07:52 PM
கடலுார்: அ.தி.மு.க.,வில் நிலவிய கருத்து வேறுபாடுகள் களைந்து ஒற்றுமையாக உள்ளோம் என, அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., கூறினார்.
கடலுாரில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம், புவனகிரி தொகுதி வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ள வேண்டிய, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் மனு அளித்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த தி.மு.க., ஆட்சியில் மக்களின் பிரச்னைகளை பற்றி சட்டசபையில் பேசியும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இப்பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன். த.வெ.க., அரசு தேர்தல் வாக்குறுதி அளித்தபடி பயிர்க்கடனை தள்ளுபடி செய்யவில்லை. அவர்களாக விதிமுறைகளை வகுத்து கடன் தள்ளுபடி செய்துள்ளதாக கூறுகின்றனர்.
விவசாயிகள் மட்டுமின்றி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் த.வெ.க., அரசு கவனம் செலுத்த வேண்டும். ஆட்கள் பிடிப்பதை தவிர்த்து விட்டு மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதிலும், ஆட்சியை எப்படி நடத்துவது, சட்டம் ஒழுங்கு பிரச்னையை தீர்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். அ.தி.மு.க., மட்டுமின்றி பல்வேறு கட்சிகளில் இருந்தும் பலர் த.வெ.க, விற்கு செல்கின்றனர். த.வெ.க., விற்கு சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள் என்பது எங்களின் நம்பிக்கை.
த.வெ.க., அரசு சில கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியில் அமர்ந்துள்ளது. தங்களுக்கு ஆதரவளிக்கும் கட்சிகள் மீது த.வெ.க., விற்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.
இதன் காரணமாக கூடுதலாக சில இடங்களில் தாங்களே வெற்றி பெற்றால் ஆட்சியை தொடர்ந்து நடத்தலாம் என்பதற்காக ஆட்களை பிடிக்கும் வேலையில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது. ஏதோ ஒரு காரணத்திற்காக சிலர் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க., வில் சேர்ந்துள்ளனர். அவர்கள் மீண்டும் இடைத் தேர்தலில் போட்டியிட்டால் மக்கள் தோற்கடிக்க வேண்டும்.
அ.தி.மு.க.,வில் எந்த பிளவும் இல்லை. கருத்து வேறுபாடுகள் களைந்து ஒற்றுமையாக உள்ளோம். முன்னாள் முதல்வர் பழனிசாமி தான் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் என்பதை முன்னணி நிர்வாகிகள் தெரியப்படுத்தியுள்ளனர். பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையி்ல் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். என்னை யாரும் விலை பேச முடியாது. எப்போதும் அ.தி.மு.க, வில் தான் பயணிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
