ADDED : ஜூலை 16, 2026 05:51 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை தொடர்பாக முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என, இந்திய கம்யூ., வலியுறுத்தியுள்ளது.
மாநில செயலாளர் சலீம் அறிக்கை:
புதுச்சேரியில் ராஜா (எ) வள்ளியப்பன் போலி மருந்து தொழிற்சாலை நடத்தி ஆயிரம் கோடி அளவில் ஊழல் செய்துள்ளார். இந்த ஊழலில் பா.ஜ.,வை சேர்ந்தவர்கள், மருந்து கட்டுப்பாட்டு துறை, சுகாதார துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அந்த ஊழல் அடங்குவதற்குள் மீண்டும் ஒரு போலி மருந்து உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குருமாம்பேட்டில் உள்ள மெடினோக் ஹெல்த் கேர் என்ற நிறுவனம் பிரிகாபலின்- 150 மருந்துகளை போலியாக உற்பத்தி செய்து விநியோகம் செய்திருக்கிறது.
இன்னும் எத்தனை போலி மருந்து தொழிற்சாலைகள் புதுச்சேரியில் இருக்கிறது என்று தெரியவில்லை. மருந்து கட்டுப்பாட்டு துறை என்ன தான் செய்கிறது என தெரியவில்லை.
முதல்வர் இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மருந்து கட்டுப்பாட்டு துறை அலுவலர்களை கூண்டோடு மாற்ற வேண்டும். போலி மருந்து தொழிற்சாலை நடத்திய பிரபாகரன் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரையும் ஜாமினில் வெளிவர முடியாத அளவில் சிறையில் அடைக்க வேண்டும். மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள் அனைத்திலும் கடும் சோதனை நடத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
