/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
2,19,422 வாக்காளர்கள் ஓட்டளிக்காதது ஏன்? தேர்தல் துறை அதிகாரிகள் விளக்கம்
/
2,19,422 வாக்காளர்கள் ஓட்டளிக்காதது ஏன்? தேர்தல் துறை அதிகாரிகள் விளக்கம்
2,19,422 வாக்காளர்கள் ஓட்டளிக்காதது ஏன்? தேர்தல் துறை அதிகாரிகள் விளக்கம்
2,19,422 வாக்காளர்கள் ஓட்டளிக்காதது ஏன்? தேர்தல் துறை அதிகாரிகள் விளக்கம்
ADDED : ஏப் 21, 2024 05:25 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த லோக்சபா தேர்தலில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 422 வாக்காளர்கள் ஓட்டளிக்கவில்லை.
புதுச்சேரி லோக்சபா தேர்தலில் 78.57 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. இது, கடந்த லோக்சபா தேர்தலை காட்டிலும் 2.62 சதவீதம் குறைவாகும்.
மொத்தமுள்ள 10,23,699 வாக்காளர்களில் 8,04,277 பேர் மட்டுமே ஓட்டளித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்துள்ள 2,19,422 வாக்காளர்கள் ஓட்டளிக்கவில்லை.
இதுதொடர்பாக, தேர்தல் துறை அதிகாரிகள் கூறும்போது, 'ஓட்டு பதிவு குறைவிற்கு வெயிலை ஒரு காரணமாக சொன்னாலும், மேலும் பல காரணங்கள் உள்ளன. சட்டசபை தேர்தல் என்றாலும், லோக்சபா தேர்தல் என்றாலும் படிப்பறிவு இல்லாத மக்கள் திரண்டு வந்து ஓட்டளிக்கின்றனர். ஆனால் நகரங்களில் உள்ள மெத்த படித்தவர்கள் ஓட்டிச்சாவடிக்கு வந்து ஜனநாயக கடமையை ஆற்றுவதில்லை.
மாநிலத்தின் கல்வியறிவு 85.8 சதவீதம் உள்ளது. அப்படி இருந்தாலும் நகர பகுதியில் வசிப்பவர்கள் ஓட்டுச்சாவடியில் வரிசையில் நின்று ஓட்டளிப்பதில்லை. இது, ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டு பதிவில் சரிவை ஏற்படுத்தி வருகிறது.
மேலும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து பல்வேறு நாடுகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக பிரான்ஸ், சிங்கப்பூர், அரபு நாடுகளில் பலரும் வேலை செய்து வருகின்றனர்.
இவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள போதிலும், எந்த ஒரு தேர்தலிலும் புதுச்சேரிக்கு வந்து ஓட்டளிப்பதில்லை. இப்போது இவர்கள் கோடை விடுமுறைக்காக தங்களது குடும்பத்தினரையும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து சென்றுவிட்டனர். இதனால் அவர்களது குடும்பத்தினரும் ஓட்டளிக்கவில்லை. இதன் காரணமாக ஓட்டு பதிவு சரிந்துவிட்டது.அதுபோல, 40 ஆயிரம் மாணவ மாணவிகள் உயர் கல்வி பயில பிற மாநிலங்கள்,வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளனர். ஓட்டுபோட ஒரு நாள் மட்டுமே விடுமுறை என்பதாலும் இவர்களில் பலர் ஓட்டளிக்கவில்லை.
தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் ஐ.டி., உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் ஓட்டுப்பதிவுக்கு வர நினைத்தாலும், அவர்களுக்கு தொடர்ச்சியாக விடுமுறை கிடைப்பதில்லை. டில்லியில் உள்ள ஒருவர் ஓட்டளித்துவிட்டு மறுநாளே எப்படி டில்லி செல்ல முடியும்.
இதுபோல ஒவ்வொருவருக்கும் ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், அதை ஏற்க முடியாது. ஜனநாயக திருவிழாவில் அனைவரும் கூடி பங்கேற்றால் தான் ஓட்டு பதிவு அதிகரிக்கும்' என்றனர்.

