ADDED : மே 19, 2024 05:19 AM

சர்வதேச நகரமான ஆரோவில் பாரத் நிவாஸில் அமைக்கப்பட்டுள்ள 'வைல்ட் லைப் ஆர்ட் கேலரி' அருங்காட்சியகம் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
புதுச்சேரி அடுத்த ஆரோவில் சர்வதேச நகருக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விடும்.
சுற்றுலாப் பயணிகளுக்கு காட்டு விலங்குகள் மற்றும் பறவைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாணவர்களுக்கு விலங்குகளை பற்றிய புரிதலை உண்டாக்கவும் ஆரோவில் பாரத் நிவாஸ் வளாகத்தில் 'வைல்ட் லைப் ஆர்ட் கேலரி' அருங்காட்சியகம் அமைக்கப் பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தை, முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில் சிற்பங்கள் வடிவமைக்கும் சிற்பக் கலைஞர் பூபேஷ் குப்தா அமைத்துள்ளார். அருங்காட்சியகத்தில் சிங்கம், புலி, யானை, சிறுத்தை, மலை பாம்பு, குரங்கு, மான், மயில் உள்ளிட்ட 30 வகையான காட்டு விலங்குகள் மற்றும் ஏராளமான பறவைகளின் சிலைகள், ஓவியங்கள் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மரத்தின் கீழே இயற்கையான சூழலில் நிற்கும் பிரமாண்டமான யானை சிலை பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. ஆரோவில்லிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அருங்காட்சியத்தை தவறாமல் கண்டு செல்கின்றனர். அருங்காட்சியத்தை பார்ப்பதற்கு ரூ.30 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
