/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜிப்மர் எதிரில் நடை மேம்பாலம் கட்டப்படுமா?
/
ஜிப்மர் எதிரில் நடை மேம்பாலம் கட்டப்படுமா?
ADDED : மே 26, 2024 05:26 AM

ஒருமித்த முடிவு எட்டப்படாமல் உள்ளதால், ஜிப்மர் எதிரே நடை மேம்பாலம் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக ஜிப்மர் இயங்கி வருகிறது. இங்கு புதுச்சேரி மட்டுமின்றி, தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி 5 ஆயிரம் பேர் வரை சிகிச்சை பெற குவிகின்றனர்.
இதுமட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தென் மாநில பகுதிகளில் இருந்து உயர் சிகிச்சைக்காக நோயாளிகள் ஜிப்மருக்கு வருகின்றனர். இதனால் ஜிப்மர் எதிரே எப்போதும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. கோரிமேடு சாலையை கடப்பது சவாலாக மாறியுள்ளது.
அதையடுத்து, ஜிப்மர் மருத்துவமனை எதிரே நடை மேம்பாலம் ஏற்படுத்த முடிவு செய்து, திட்டமும் தயார் செய்யப்பட்டது. ஆனால் பல மாதங்கள் உருண்டோடிய நிலையில் நடை மேம்பாலம் கட்டுவதற்கான சாத்திய கூறுகள் தெரியவில்லை. இன்னும் பேச்சு வார்த்தையே ஜவ்வாக இழுத்து வருகிறது.
அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, ஜிப்மர் எதிரே நடைமேம்பாலம் கட்டுவது அவசியமாக உள்ளது என, தேசிய நெடுஞ்சாலை ஆணையமான நகாய் கருதுகிறது.
ஆனால், ஜிப்மர் நிர்வாகமோ சப்-வே கட்டலாம் என, வேறு முடிவில் உள்ளது. இது தொடர்பாக ஒருமித்த கருத்து எட்டப்படாமல் உள்ளதால் இழுபறி நீடித்து வருகிறது.
இதன் காரணமாகவே ஜிப்மர் எதிரே மேம்பாலம் கட்டுவது தள்ளிப்போகிறது. ஜிப்மர் நிர்வாகம், நகாய் இணைந்து ஒருமித்த முடிவுக்கு வந்து, விரைவில் பணியை துவங்க வேண்டும்.